ஹக்கீம்:ஏமாற்று வித்தையின் ஏகலைவன்

Posted: மார்ச் 6, 2017 by மூஸா in Uncategorized

image

image

JABEER RAZI MOHAMED

“ஒரு நயவஞ்சகனின் பண்புகள் மூன்று.பேசினால் பொய் கூறுவான்.வாக்களித்தால் மாறு செய்வான்.நம்பினால் மோசடி செய்வான்’’(புகாரி)
**************************************************
ஜோ டார்பி ஈராக்கின் அபூ குரைப் சிறைச்சாலையில் பணிபுரிந்த ஒரு அமெரிக்கப் படைவீரர்.அபூ குரைப் சிறைச்சாலையின் சித்திரவதைக் கூடங்களில் சிறைக்கைதிகளுக்கு நடக்கும் அநியாங்களைப் புகைப்படங்களாக முதலில் கசியச்செய்தவர் அவர்தான். அந்த சித்திரவதைக் கூடத்திலே பணிபுரிந்துகொண்டு உங்களின் நண்பர்களின் அநீதிகளைப் பற்றி நீங்கள் ஏன் வெளியிட்டீர்கள் என்று ஜோ டார்பியிடம் கேட்கப்பட்டதற்கு அவர் பதிலளித்தார்.” இதுவரைக்கும் நான் நம்பிக்கொண்டிருந்தவைகளை அவர்கள் தகர்த்தெறிந்ததோடு இதுவரைக்கும் எனக்கு கற்பிக்கப்பட்டு வந்த யுத்த சட்டங்களையும் அவர்கள் மீறினார்கள்’’

ஹசனலியை காங்கிறசின் ஜோ டார்பி என்பேன் நான்.காரணம் ஒரு நிறுவனத்தின் செயலாளர் நாயகமாக இருந்து கொண்டு,அந்த நிறுவனத்திற்குள் நடக்கும் அநீதிகளின் ஒரு நேரடிச்சாட்சியாக இருந்து அவதானித்து விட்டு இதுவரைக்கும் தான் நம்பியிருந்த அரசியல் கனவுகளை,அரசியல் ஒழுக்க நெறியை, கட்சியின் தலைமையும் அதன் உயர் பீடமும் மீண்டும் மீண்டும் மீறும்போது,தன் அதிருப்தியை வெளியிட்டதன் காரணமாக வெளியேற்றப்பட்டு இன்று மக்கள் முன்னிலையில் காங்கிறசின் உண்மையான சுயரூபத்தைக் கசிய விட்டிருக்கிறார்.அதனால்தான் அவரை நான் காங்கிறசின் ஜோ டார்பி என்றேன் அவருடைய வாயாலே அவரின் நிறுவனத்தின் அசிங்கத்தையும், தகுதியில்லாத தலைமைத்துவத்தின் கோமாளித்தனத்தையும், முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக தங்கள் சுயலாபங்களுக்காக அவர்கள் இழைக்கும் அநீதியையும் கூறும்போது மக்களுக்கு ஹக்கீம் மீது கோபம் பொத்துக்கொண்டு வந்ததை நேற்றிரவு காண முடிந்தது.

ஹசனலி தான் கேட்ட அதிகாரம் பொருந்திய செயலாளர் பதவியும்,பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் கொடுக்கப்பட்டிருந்தால் வெளியே வந்திருப்பாரா என்ற ஒரு கேள்வியும் எல்லோருக்கும் எழுகிறது.அதற்கான பதிலையும் அவர் வெளிப்படையாகவே சொல்கிறார்.எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி தேவையில்லை. அதிகாரம் பொருந்திய செயலாளர் பதவிதான் வேண்டும்.அந்த செயலாளர் பதவி மூலம் தன்னைத் தனியே விட்டுவிட்டு துயில் கொள்ளும் தன் ஆத்ம நண்பன் அஷ்ரபின் புதைந்து போன கனவுகளை ஆகக்குறைந்தது ஹக்கீம் அன்ட் கொம்பனி அழிக்காமலாவது தன்னால் பாதுகாக்க முடியும் என்று அந்த மூத்த போராளி நம்புகிறார்.அத்தோடு சுயலாபத்தை மாத்திரமே கொள்கையாகக் கொண்ட தலைமையை ஓரளவு கட்டுப்படுத்த தனது அதிகாரம் கொண்ட செயலாளர் பதவி உதவும் என்றும் அவர் நினைக்கிறார்.

அவர் நேற்றிரவு கூறியவைகள்தான் ஜனநாயக அரசியலில் ஒவ்வொரு வாக்காளனுக்கும் மறைக்கப்படும் உண்மைகள்.திரைக்குப் பின்னால் நடந்தவைகள். ஒவ்வொரு அரசியல் வாதியின் சுயரூபத்தின் தத்ரூபங்கள். காங்கிறசின் ஒவ்வொரு அரசியல் நகர்வுக்கும் பின்னால் இருந்த அசிங்கமான வரலாற்றை அவர் மக்களுக்குச் சொல்லியிருக்கிறார்.அந்த அனுபவம் மக்களுக்கு மிகவும் புதிது.

எத்தனை மோசமானவர் ஹக்கீம் என்பது நேற்று பலருக்குத் தெரிந்திருக்கும்.

மாகாண சபைத்தேர்தலின்  போது மரத்தை விட்டுவிட்டு மஹிந்தவின் வெற்றிலையில் கேட்போம் என்று மன்றாடியது,ஷிராணி பண்டாரநாயகவுக்கு எதிரான பிரேரணையில் வாக்களிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டு தினேஷ் குணவர்தன வாக்களிப்பதற்கு இழுத்துக்கொண்டு போய்விட்டான் என்று கூறி வாக்களித்தது,நிவிங்கும சட்டமூலத்திற்கு மஹிந்தவுக்கு ஆதரவாக வாக்களித்தது,18ம் சீர்திருத்தத்தில் மஹிந்தவுக்கு ஆதரவாக வாக்களித்தது,முழு முஸ்லீம் சமூகமும் மைத்திரியுடன் இருக்க விரும்பிய போதும் கூட மஹிந்தவை ஆதரிக்க விரும்பியது.

ஹக்கீம் மஹிந்தவின் ஒரு அடிவருடியாக இருந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது,
முஸ்லீம் சமூகம் அனைத்தும் மஹிந்தவுக்கு எதிராக இருந்தபோதும் ஏன் ஹக்கீம் மஹிந்தவோடு இருந்தார் என்ற கேள்விக்கு ஹசனலி நேற்றைய மேடையில் பதிலளிக்கவில்லை.அந்த பதிலைத்தான் அன்றைய அதிர்வு நிகழ்ச்சியில் விலக்கப்பட்ட தவிசாளர் கூறிச்சென்றார். குமாரி கூரே,துறைமுகத்தில் செய்த ஊழல்,சல்லாப வீடியோ என்று அந்தக் காரணங்கள் பல.

அந்த காரணங்களில் ஒன்றைத்தான் நான் இதுவரைக்கும் பகுதிபகுதியாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த விவகாரங்களை இல்லாமல் செய்ததால்தான் மஹிந்தவுக்கு ஹக்கீம் நன்றிக்கடன் செலுத்தி வந்திருகிறாரே ஒழிய காங்கிறசை வாழவைத்த மக்களுக்கு அல்ல.ஹக்கீம் அவர்கள் செய்த விபச்சாரமும்,ஊழலும்,குடியும்தான் எங்கள் சமூகம் அடிமைப்பட்டதற்கான காரணங்கள்.அதைத்தான் இதுவரைக்கும் நான் புரியவைக்க முயல்கிறேன்.அதே விடயத்தை இன்று தவிசாளரும்,செயலாளரும் கூறுகிறார்கள்.வேறு என்ன வேண்டும் உங்களுக்கு.அதை இன்னும் நம்பாமல் இருக்கும் போராளிகளுக்காகத்தான் நான் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.இது ஒருவரின் தனிப்பட்ட விடயமா என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

அடுத்தது, ஹக்கீம் ஒரு ஏமாற்றுக்காரர்.ஒரு புழுகு மூட்டை. ஏமாற்றுவித்தையை அக்குவேறு ஆணிவேறாகக் கற்றவர்.ஒரு மனிதனின் நற்பண்புகளைப் பாவித்து அம்மனிதனை ஏமாற்றுவதில் பெயர் போனவர்.பொய்யும் வாக்குமாறுவதும் ஒரு முனாபிகின் பண்பு என்று நபிகளார் கூறினார்கள். அனைத்தும் அழகாக ஹக்கீமுக்குப் பொருந்தி வருகிறது.

அன்று தேர்தல் நாயகத்திடம் ஹசனலி மறுத்திருந்தால் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டிருக்கும்.ஹசனலியை ஆமோதிக்க வைப்பதற்கு வுழூ செய்து கொண்டு வந்து ஹஸனலிக்கு முன்னாலே இரண்டு ரகஅதுக்கள் சுன்னத்து தொழுதுவிட்டு நாளை சல்மான் பாராளுமன்றப் பதவியை ராஜனாமாச் செய்கிறார். எதிர்வரும் ஜனவரி 09ம் திகதி(2017), நீங்கள் சத்தியப்பிரமாண எடுக்கலாம்.இனி மரணம்தான் எம்மைப் பிரிக்கும் என்று ஒரு முஸ்லீம் சொல்லும்போது யார்தான் நம்பமாட்டார்கள்.மறுநாள் சல்மானின் ராஜனாமாக்கடிதத்தை ஹக்கீம் ஹசனலியின் கையில் கொடுக்கும்போது யார்தான் நம்பமாட்டார்கள்.சல்மான் இதுவரைக்கும் ராஜனாமாச் செய்யவில்லை.இன்று வஞ்சிக்கப்பட்டு அனைத்தையும் பறிக்கப்பட்டு ஒரு கட்சியின் ஸ்தாபகர் வெளியே வீசி எறியப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஏமாற்றுக்காரன் முஸ்லீம்களின் தலைவராக இருக்கும் வரைக்கும் நாம் ஒருநாளும் தலைநிமிரவே முடியாது.

ஹக்கீம் தனக்கு இத்தனை அநீதிகள் இழைத்தும் ஹகீமை விலக்க முற்படவில்லை.திருத்தவே முற்படுகிறார். ஹக்கீம் திருந்துவார் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.ஹக்கீம் திருந்த நினைத்திருந்தால் 12 வருடங்களுக்கு முன்னர் குமாரி கூரே அவரின் கண்முன் எரிந்தபோது போது திருந்தியிருப்பார்.பேருவளை பற்றி எரிந்தபோது அவர் திருந்தியிருப்பார்.’ஏண்ட வாப்பாவைத் தாங்கோ’ என்று பேருவளையில் அந்த சின்னஞ்சிறு குழந்தைகள் ஏங்கி அழுத போது ஹக்கீம் திருந்தியிருப்பார். முஸ்லீம் சமூகம் கதறி அழுதபோது திருந்தாத ஹக்கீம் ஹசனலியால் திருந்துவாரா? இல்லவே இல்லை.ஹக்கீம் திருந்தவேமாட்டார். ஹக்கீமை காங்கிறசை விட்டு ஓட ஓட விரட்டவேண்டும்.அது மக்களால் மாத்திரம்தான் முடியும்.

இங்கே நான் இணைத்திருப்பது ஹசனலியை ஏமாற்றுவதற்காக ஹக்கீம் அவர்கள் ஹசனலியிடம் அன்று கொடுத்த சல்மானின் ராஜனாமாக் கடிதம். ஹசனலி எவ்வாறு ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்பதற்கு இது ஒரு சாட்சி. இது போல் ஹக்கீமின் திருகுதாளங்களை வெற்று வார்த்தைகளோடு மாத்திரம் நிறுத்தாமல் ஆதாரங்களாக ஆவணங்களாக மக்கள் மன்றின் முன் நாம் ஒவ்வொன்றாகக் இன்று முதல் கொண்டுவருவோம்.

நீங்கள் ஒரு உண்மையான காங்கிறஸ் போராளியாக இருந்தால், மக்களுக்காகத்தான் தலைமை, தலைமைக்காக மக்கள் அல்ல என்ற கோட்பாட்டை நீங்கள் ஆத்மார்த்தமாக நம்பினால், இக்கட்சிக்காக கண்ணீரையும் இரத்தத்தையும் சிந்தியது உண்மையாக இருந்தால், முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சி மீது உண்மையான நம்பிக்கை வைத்த ஒரு முஸ்லீமாக நீங்கள் இருந்தால் இந்தக் கடித்ததைப் பிரதிகள் எடுத்து  நஃமதுஹு வனுசல்லி அலா ரசூலிஹில் கரீம் என்று அம்பாரையில்  ஆரம்பிக்க வரும் ஹக்கீமின் போலி முகத்தில் வீசி எறிந்து விளக்கம் கேளுங்கள். முடியுமானால் ஹக்கீம் பதில் தரட்டும்.அநியாயம் இழைக்கப்பட்டவர்களின் கண்ணீருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் திரை இல்லை என்று ஹக்கீமிடம் சத்தமிட்டுச் சொல்லி விடுங்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s