பல முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் தெளிவான நிலை இல்லை.

Posted: மார்ச் 14, 2017 by மூஸா in Uncategorized

image

கரையோர மாவட்டம் என்பதற்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கும் சம்பந்தமில்லை. எனவே தீர்வு தொடர்பான பேச்சுக்களில் தனி அலகு கோரிக்கையை முன்வைக்கலாமே தவிர அங்கு கரையோர மாவட்டத்தை பேசவேண்டியதில்லை என்பதைக்கூட அவர்களுக்கு  நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது…..

——————————————————–
வடக்கு, கிழக்கு இணைப்பும்
கரையோர மாவட்டமும் !

‘சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது’ என்று சொல்வார்கள். எந்தவொரு விடயத்திலும் பக்குவப்படாத, அதனை விளங்கிக் கொள்ளாத, அதன் தார்ப்பரியத்தை அறிந்திராத சிறிய பிள்ளைகள் அல்லது சிறுபிள்ளைத்தனமானவர்களின் முயற்சிகள் வெற்றிபெறுவது நிச்சயமில்லை என்பதுதான் இதன் உள்ளர்த்தமாகும்.

முஸ்லிம் அரசியல் பரப்பில் தம்மை பெருந்தலைவர்கள் போல காட்டிக் கொள்கின்ற அரசியல் தலைவர்களும் அவர்கள் விடுகின்ற அறிக்கைகளும்  அவ்விடயம் பற்றி ஆழஅகலமாக சிந்திப்போருக்கு சிறுபிள்ளைத்தனமாகவே தெரிகின்றன. இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும் முஸ்லிம்களின் அபிலாஷைகள் விடயத்திலும் சில அரசியல்வாதிகள் நடந்து கொள்கின்ற முறையை பார்த்தால் அவர்கள் விளக்கமற்ற குழப்பத்திற்கு ஆளாகி இருப்பதும் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அதனால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்த விடயத்திலும் முஸ்லிம்களுக்குரிய பங்கு உறுதிப்படுத்தாமல் விடப்பட்டு விடுமோ என்ற நியாயமான சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.

குறிப்பாக, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, கல்முனை கரையோர மாவட்டம், முஸ்லிம்களுக்கான தனி அலகு பற்றிய எந்த தெளிவான நிலைப்பாடுகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் இல்லை. ஒரு முக்கியமான பரீட்சைக்காக முன்கூட்டியே படிக்காமல் பரீட்சை நிலையத்திற்கு சென்று, அந்த சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகின்ற எதையோ எழுதிவிட்டு வருகின்ற ஒரு மாணவனைப் போல, அந்தந்த சந்தர்ப்பத்தை சமாளிப்பதற்காக எதையாவது உளறி வைக்கின்ற போக்குகளை முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் பரவலாக காணமுடிகின்றது.

இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. ஒரு குறிப்பிட்ட தலைவரோ அரசியல்வாதியோ பிழை செய்கின்றார் என்றோ மற்றையவர்கள் எல்லோரும் மிகச் சிறப்பாக செயற்படுகின்றார்கள் என்றோ வரையறுக்க முடியாது. எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே விதமான போக்கையே கொண்டுள்ளனர். தமது அரசியல் எதிர்காலத்திற்கு அல்லது தான் சார்ந்திருக்கின்ற பெருந்தேசிய கட்சிக்கு ஏற்றாற்போல அடிக்கடி கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மாற்றிக் கொண்டு போகின்றனர். அதற்காக மக்களை முட்டாளாக்கும் நியாயங்களையும் முன்வைக்கின்றனர். எந்தப் பெரிய பிழையையும் சரியென நிரூபிப்பதற்கான சூட்சுமத்தை அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.
தீர்வுக்கான நேரத்தில்

இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஏதோ ஒரு அடிப்படையில் முன்வைக்கப்படப் போகின்றது. அரசியலமைப்பை மறுசீரமைப்பதிலும், செயன்முறைகளிலும் சில தாமதங்கள் ஏற்பட்டிருந்தாலும் அரசாங்கம் தீர்வை முன்வைத்தேயாக வேண்டிய ஒரு நிலைக்கு வந்துள்ளமை கண்கூடு. இந்நிலையில், தமிழர் தரப்பு இணைந்த வடகிழக்கில் ஒரு நிரந்தர தீர்வை வேண்டி நிற்கின்றது. இதற்காக வடக்கு, கிழக்கை இணைப்பதற்கான பகீரத பிரயத்தனங்களை கடந்த சில வருடங்களாக தமிழர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள் என்று சொல்லலாம்.

ஆரம்பத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கை இணைக்கும் சாத்தியம் இருப்பதாக சொல்லப்பட்டது. மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமின் போக்குகளும் அந்த சந்தேகத்தை வலுப்படுத்தியிருந்தன. ஆனால், அதன்பிறகு கிழக்கு மாகாண முஸ்லிம்களிடத்தில் இருந்து இவ் இணைப்பிற்கு எதிராக கடுமையான ஆட்சேப அலைகள் எழுந்தன. இணைப்பைக் கோருவோரும், அதற்கு ஆதரவளிப்போரும் விமர்சிக்கப்பட்டனர்.
ஆதலால் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல், கிழக்குமாகாண அரசியல்வாதிகளின் ஒப்புதல் இல்லாமல் வேறு யாருடைய சம்மதத்தை பெற்றுக் கொண்டும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியாது என்ற நிதர்சனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது உணர்ந்து கொண்டுள்ளது எனலாம். மறுபுறத்தில், தேசிய அரசியலிலும் இதற்கான நிகழ்வுகள் சற்றுக் குறைவடைந்திருக்கின்றன என்றே தோன்றுகின்றது. 

எனவே, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் ஒப்புதலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாகவே இப்போது கோரி வருகின்றது. மு.கா. தலைவர் ஊடாகவோ அல்லது வேறு கட்சிசார் அரசியல்வாதிகளின் ஊடாகவோ மக்களின் ஆதரவை முழுமையாக திரட்ட முடியாது என்று நினைத்தோ என்னவோ, தமிழ் அரசியல்வாதிகள் ஊடகங்கள் வாயிலாக முஸ்லிம்களின் நிலைப்பாட்டை கோரி வருவதை அவதானிக்க முடிகின்றது. இது நல்லதொரு சமிக்ஞையும் ஆகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளடங்கலாக அக்கூட்டமைப்பில் உள்ள பலரும் யதார்த்தத்தை புரிந்து கொண்டு முஸ்லிம்களின் வேண்டுதலை எதிர்பார்த்திருக்கின்றனர். அண்மையில் கிழக்கிற்கு வருகைதந்த வடமாகாண முதலமைச்சரும் முஸ்லிம் தரப்பு கோரிக்கை என்ன என்று கேட்டுவிட்டுச் சென்றிருக்கின்றார்.

வாழாவிருத்தல்

ஆனால், இவ்வளவு நடந்த பிறகும் முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இந்த மக்களுக்கு என்ன தேவை என்ற கோரிக்கையை உரிய முறையில் முன்வைக்கவில்லை என்பது மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. உண்மையில் முஸ்லிம்கள் தமக்கு என்ன தேவை என்பதை தமிழ் தரப்பிடம் அன்றி அரசாங்கத்திடமே முன்வைக்க வேண்டும். ஏனெனில் இரண்டு தரப்பிற்கும் தீர்வை வழங்கப் போவது அரசாங்கமே ஆகும். ஆனால், இனப் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்டு, தீர்வுத்திட்டம் ஒன்றை பெறுவதற்காக கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் தரப்புடனும்; முஸ்லிம்கள் பேசி இணக்கம் காண வேண்டும். கடைசியில், தங்களுக்கு என்ன தேவை என்பதை கூட்டாக தீர்மானித்து, அதனை ஒரு ஆவணமாக முறைப்படி அரசிடம் சமர்ப்பிப்பதுடன், அதிலுள்ள விடயங்களை தமிழ் தரப்பிற்கும் தெரியப்படுத்த வேண்டும்.

ஆனால் இதனை எந்த முஸ்லிம் தலைமையும் இதுவரைச் செய்யவில்லை. முஸ்லிம் காங்கிரஸூம் சரி மற்றைய காங்கிரஸ்களும் சரி அரசியல்வாதிகளும் சரி….. ‘எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது’ என்ற மாயையை உருவாக்கிவிட்டு ஒன்றுமே செய்யாமல் வாழாவிருக்கின்றனர். தீர்வுத்திட்டத்தில் என்ன தேவை என்பதை கேட்காமல் இருப்பது ஒருபுறமிருக்க, முஸ்லிம்களுக்கு என்ன தேவை? அதன் உள்ளடக்கம் என்னன?அதன் வடிவம் என்ன என்பது பற்றிய தெளிவும் இல்லாதவர்களாவே முஸ்லிம் அரசியல்வாதிகள் இருப்பதாக தெரிகின்றது.

விளக்கமில்லா அறிக்கை

வடக்கு, கிழக்கு இணைப்பு, முஸ்லிம் தனிஅலகு அல்லது மாகாணம், கரையோர மாவட்டம் என்ற கருப்பொருட்கள் முக்கியமானவை. ஆயினும், முஸ்லிம்கட்சித் தலைவர்கள் இவை பற்றி எல்லாவற்றையும் நன்றாக விளங்கிக் கொண்டுள்ள போதும் நிலைமைகளை சமாளிப்பதற்காக பாரதூரம் அறியாத கருத்துக்களை வெளியிடுகின்றனர். இதேவேளை கிழக்கில் இருக்கின்ற சில அரசியல்வாதிகளுக்குக் கூட கரையோர மாவட்டத்திற்கும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கும் தனிஅலகுக்கும் இடையில் இருக்கின்ற வித்தியாசமே தெரியாது. முஸ்லிம் அரசியலில் சிறுபிள்ளைத்தனங்கள் இப்படித்தான் இருக்கின்றன.

அண்மையில் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவர் “வடக்கு, கிழக்கு இணைப்பை மு.கா. எதிர்க்கவில்லை என்றும், கரையோர மாவட்டம் அல்லது முஸ்லிம் அலகு என்ற நிபந்தனையுடன் வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து பேசிவருகின்றோம்” என்ற கருத்தை தெரிவித்திருந்தார். தேசிய ஊடகங்களிலும் இது பிரசுரமாகியிருந்தது. முஸ்லிம் அரசியல் அவதானிகள் இக்கருத்தை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றனர். கரையோர மாவட்டம் என்பது என்ன? வடக்கு கிழக்கு இணைப்பு என்பது என்ன? என்ற அடிப்படை விளக்கமில்லாமல் அவர் இருக்கின்றாரா என்ற சந்தேகத்தை இந்த கேள்வி தோற்றுவித்திருக்கின்றது.
இது ஒருபுறமிருக்க மு.கா.வுக்குள் பிளவுகள் ஏற்படத் தொடங்கியிருக்கின்ற காகட்டத்தில், கடைசியாக நடைபெற்ற பேராளர் மாநாட்டின் தீர்மானங்களில் கரையோர மாவட்டக் கோரிக்கை உள்ளடங்கி இருக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவரால் முன்வைக்கப்பட்டு வந்த இக் கோரிக்கை கிட்டத்தட்ட எல்லா பேராளர் மாநாட்டின் தீர்மானங்களிலும் உள்வாங்கப்பட்டிருந்தது. செயலாளர் நாயகமாக பதவி வகித்த எம்.ரி.ஹசன்அலி இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

இந்நிலையில், தனிவழியில் பயணிக்க ஆரம்பித்திருக்கின்ற எம்.ரி. ஹசன்அலி அணியினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிந்தவூரில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இக் கூட்டத்திற்கு யாரும் எதிர்பாராத அளவுக்கு பெருமளவிலான மக்கள் வந்திருந்தனர். இங்கு உரையாற்றிய ஹசன்அலி,  கரையோர மாவட்டம் தொடர்பில் கட்சிக்குள் சிலருக்கு விருப்பம் இருக்கவில்லை என்று கூறிய அவர், இதனைப் பெற்றுக் கொள்வதில் காட்டப்பட்ட அசிரத்தை சம்பந்தமாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பசில் ராஜபக் க்ஷவிடம் தான் அழைத்துச் செல்லப்பட்டதையும் கரையோர மாவட்டம் குறித்து அங்கு பேசப்பட்ட விடயங்களையும் கூட அவர் பிரஸ்தாபித்தார்.
இப்பின்னணியில், மு.கா. தலைவர் உள்ளடங்கலாக சகல முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மக்களும் இதுபற்றி பூரண தெளிவை பெற்றுக் கொள்ள வேண்டும். உரிமைகளை, பங்கை கேட்டுப் பெறுவதற்கு முன்னர் நமக்கு அதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.

தெளிவுபெற வேண்டியவை

தீர்வுத்திட்டமானது வடக்கு, கிழக்கு இணைந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தமிழ் தரப்பு கருதுகின்றது. எனவே வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தேசிய இனப்பிரச்சினையுடன் தொடர்புபட்டதான விடயமாகும். ஆனால் கரையோர மாவட்டம் என்பதற்கும் இனப்பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை. அது தற்போதிருக்கின்ற அம்பாறை மாவட்டத்திற்குள் இன்னும் ஒரு மாவட்டத்தை உருவாக்குவது பற்றிய பொதுநிர்வாக செயன்முறையாகும். இதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வடக்கில் உள்ள தமிழர்களுடன் கிழக்கு தமிழர்களும் இணைந்து ஒரு அதிகார மையத்தின்கீழ் வாழ விரும்பினால் அதை கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் கொச்சைப்படுத்த முடியாது. ஆனால், வடக்கு, கிழக்கை இணைத்தால் தனி தமிழ் மாகாணம் ஒன்றும், தனி முஸ்லிம் மாகாணம் ஒன்றும் உருவாக்கப்பட வேண்டுமென முஸ்லிம்கள் கோர முடியும். அல்லது, நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணத்தை கோரலாம். அல்லது, சமஷ்டி முறையை கோர முடியும். அவ்வாறில்லாவிட்டால், தற்போதிருக்கின்ற அடிப்படையிலேயே வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாகவே இருக்க வேண்டுமென கோர முடியும்.

ஆனால், ஒருபோதும் கிழக்கு முஸ்லிம்கள் தமக்கு இவ்விதமான தீர்வுகள் எதுவும் தராமல் வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். யார் சொன்னாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படின் முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் நிறைய இழப்புக்களை சந்திப்பார்கள். அரசியல் அதிகாரம் இழத்தல், நிதி ஒதுக்கீடுகளில் குறைவு, வீதாசாரம் குறைதல் உள்ளடங்கலாக பல பாதிப்புக்கள் ஏற்படலாம்.

எனவேதான் கிழக்கு மக்கள் அவ்விணைப்பை எதிர்க்கின்றனர். அவ்வாறு இணைப்பதென்றால் தமது பங்கை உறுதிப்படுத்த வேண்டுமென கோருகின்றனர். அப்படிப் பார்த்தால், கரையோர மாவட்டம் என்பது தீர்வுத் திட்டத்தின் கீழான ஒரு சங்கதியும் அல்ல, முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் பங்கும் அல்ல. கரையோர மாவட்டத்தை பெற்றுக் கொண்டு இவ்விணைப்புக்கு இடம்கொடுக்கவும் முடியாது. தீா்வு தொடா்பான பேச்சுக்களில் தனி அலகு கோரிக்கையை முன்வைக்கலாமே தவிர அங்கு கரையோர மாவட்டம் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை.

கரையோர மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் பிரிந்த பொழுது ஆயிரத்திற்கும் குறைவான சிங்கள பதிவுசெய்யப்பட்ட வாக்குகளே தற்போதிருக்கின்ற அம்பாறை மாவட்டத்தில் இருந்தன. இருப்பினும் சிங்களப் பிரதேசமான அம்பாறையே மிகத் தந்திரமான முறையில் மாவட்டத்தின் தலைநகராக ஆக்கப்பட்டது. அம்பாறையில் கச்சேரி இருப்பதாலும் பெரும்பான்மை இனத்தவரே அரச அதிபராக கடமை புரிவதாலும் அந்த அகங்காரத்தில் அங்குள்ள சிங்கள அரசியல்வாதிகள் காட்டுகின்ற ஓரவஞ்சனையாலும், அன்றுமுதல் இன்று வரை கரையோரத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் இழந்தது ஏராளம்.

அன்றாட அரச பணிகள் தொடக்கம், காணிகள் அபகரிக்கப்பட்டது தொட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படாது வரைக்கும் நீண்டுசெல்லும் பல அநியாயமிழைப்புக்களுக்கு அம்பாறையின் அதிகார மையமே காரணம் என்றால் மிகையில்லை. எனவேதான், அம்பாறை மாவட்டத்திற்குள் கல்முனையை தலைநகராகக் கொண்டு கரையோர மாவட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதில் தமிழர் அல்லது முஸ்லிம் அரச அதிபர் பதவிவகிக்க வேண்டுமென்றும் கோரப்பட்டு வருகின்றது. இதனால் இனி இழக்கப் போவதையாவது குறைக்கக் கூடியதாக இருக்கும்.
கரையோர மாவட்டம் என்பது வெறும் அரசியல்

கோஷம் அல்ல. அம்பாறை மாவட்டத்திற்குள் இன்னுமொரு நிர்வாக மாவட்டம் உருவாக வேண்டும் என்று பலமுறை அரசாங்க ஆணைக்குழுக்களே அடையாளம் கண்டுள்ளன. குறிப்பாக 1970களில் மொறகொட ஆணைக்குழு இதனை கல்முனை மாவட்டத்தை சிபாரிசு செய்திருந்தது. அதன்பிறகு அரசாங்கங்களுடன் மு.கா. செய்து கொண்ட ஒப்பந்தங்களிலும் இதற்கு உடன்பாடு காணப்பட்டது. ஆனால், பிற்காலத்தில் மு.கா. முழுமூச்சாக செயற்படாமையாலும், வேறு பல காரணங்களாலும் அக்கனவு நனவாகவில்லை.
ஆகவே, கரையோர மாவட்டம் என்பது கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போல ஒரு நிர்வாக
மாவட்டமாகும். அது பொதுநிர்வாக அமைச்சின் கீழ் அரசாங்க அதிபரின் அதிகாரத்தின் கீழ் செயற்படும். அது அன்றாட பொதுப் பணிகளை இலகுவாக்குமே தவிர, முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கமாட்டாது.

மிகக் குறிப்பாக, தீர்வுத்திட்டத்தின் ஊடாக முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்ற எந்த அபிலாஷையையும் கரையோர மாவட்டம் நிறைவேற்றாது.
உண்மையில் கரையோர மாவட்டம், வடக்கு கிழக்கு இணைப்புக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. மு.கா.வுக்கோ ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கோ அரசாங்கத்தின் உதவியும் தைரியமும் அர்ப்பணிப்பும் இருந்தால் ஒரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கரையோர மாவட்டத்தை உருவாக்கலாம். இதற்கு யாருடைய சம்மதமும் கட்டாயமில்லை. அரசாங்கம் முடிவெடுத்தால் செய்யலாம்.

மாகாணங்கள் இணைதல்

ஆனால், வடக்கு கிழக்கு என்பது இதிலிருந்து வேறுபட்டது. இது நேரடியாக தீர்வுத்திட்டத்துடன் தொடர்புபடுகின்றது. இதனை இணைப்பது என்றால் முஸ்லிம்கள் சம்மதிக்க வேண்டும். அப்படி சம்மதிக்க வைப்பது என்றால் தனிமுஸ்லிம் மாகாணத்தையோ, சமஷ்டியையோ குறைந்தபட்சம் முஸ்லிம் தனி அலகையோ வழங்க வேண்டும். அதன்படியான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு சம்மதம் தெரிவிக்கலாமே தவிர, கரையோர மாவட்டத்தைப் பெற்றுவிட்டு வடக்கு கிழக்கை இணைத்துக் கொடுக்க முடியாது.

இவ்விடயத்தில், பொதுவாக எல்லா முஸ்லிம் தலைவர்களும் இனப்பிரச்சினை தீர்வுத்திட்டம், வடக்கு கிழக்கு இணைப்பு, முஸ்லிம் மாகாணம், முஸ்லிம் அலகு, கரையோர மாவட்டம் என்பவை தொடர்பில் இவ்வாறான குழப்பகரமான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். அவ்வாறானவர்கள் இவற்றின் உண்மையான அர்த்தங்களை கற்றுக் கொள்வதன் மூலம் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

முஸ்லிம்களின் அபிலாஷைக்கான அரசியல் நகர்வு என்பது சிறுபிள்ளை வேளாண்மை போல் ஆகிவிடக் கூடாது.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 12.03.2017)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s