Archive for the ‘சிறப்புக் கட்டுரைகள்’ Category

கெஹலிய ரம்புக்வெல்லவின் கோபமும் ஜனாதிபதியின் சூளுரைப்பும் அடுத்த சில மாதங்களுக்கு அரசியல் ஹீரோயிசமாக பேரினவாத சக்திகளால் நினைவு கூறப்படலாம்.

ஆனாலும் அதையும் தாண்டிய அரசியல் சதுரங்கத்திற்குள் இலங்கை தற்போது தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிழக்குலகின் பலத்தோடு இலங்கை அரசியலை புதிய பாதை நோக்கி நகர்த்திச் செல்லும் இலங்கையை ஆளும் குடும்பம் வேகமான வளர்ச்சியின் மூலம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை ஒரு முதலீட்டுத்தளமாக மாற்றி சந்தைப்போட்டியில் குளிர் காயலாம் எனும் திசை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

சீனா அள்ளியிறைக்கும் கடனில் மூழ்கியிருக்கும் இலங்கையின் எதிர்காலம் பற்றிய திட்டமிடலின்றி கோடான கோடிகளை சீன அரசாங்கம் முதலிடவில்லை என்பதும் அரசியல் சதுரங்கத்திற்குள் பல் கோண அழுத்தத்துக்குள்ளாகியிருக்கும் இந்தியா, இலங்கை தம் ஆளுமையை விட்டு நகர்ந்து விட்ட உண்மையை ஏற்கனவே உணர்ந்துகொண்டுள்ளமையும் ஏறத்தாழ உணரப்பட்ட விடயமாகும்.

மேற்கின் பிடியை விட்டு அகன்றாலும் பார்வையை விட்டு மறைந்திருக்கும் அளவுக்கு இலங்கை ஏதோ ஒரு தீவில்லை, பூகோள  முக்கியத்துவங்களையுடைய ஒரு நிலப்பரப்பாகும். அப்பேற்பட்ட நிலப்பரப்பின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில் எப்போதுமே நிலவி வரும் இன முறுகல் நிலை உச்சத்தையடைந்து வீழ்ந்த பின் ஒரு வெளிநாட்டுத் தலைவர் இலங்கையின் வட பகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.

முதலில் இவ்வாறு ஒரு தலைவர் அங்கு விஜயம் செய்வதற்கு ஏதுவாக யுத்தத்தை நிறுத்திய பெருமை இலங்கையின் தற்போதைய அரசையே சாரும் என்றாலும் ஒரு பொறுப்புள்ள அரசாக தம் மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்பதே உலக நாடுகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

ஐ.நாவின் கணக்குப்படி இறுதி யுத்தத்தின் போது 40,000க்கும் அதிகமாக பொது மக்கள் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாண்மையோனோர் அரசின் குண்டு வீச்சுக்கு இலக்கானதாகக் கூறப்படும் அதே வேளை விடுலைப் புலிகள் அமைப்பின் பங்களிப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது.

தமது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு புறத்தால் அரசோடு இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட புலித்தலைவர்கள் மறு புறத்தால் மக்களை கேடயமாகப் பயன்படுத்திய போது எது நடந்தாலும் பரவாயில்லையெ கொத்து கொத்தாக அப்பாவி மக்களை கொன்று குவித்துக் கொண்டே தமது இலக்கை அடைந்தது இலங்கை அரசாங்கம் என்பதே உண்மை.

Commonwealth Heads of Government Meeting - Sri Lanka

சிறுபாண்மை மக்களுக்கெதிரான அடக்குமுறை என்பது தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் அடாவடித்தனம், முஸ்லிம்களுக்கெதிரான புலிகளின் அடாவடித்தனம் மற்றும் தற்போது முஸ்லிம்களுக்கெதிரான சிங்கள பேரினவாத சக்திகளின் அடாவடித்தனம் என பட்டியலிடப்படக்கூடியது.

இதை உலகம் நன்கு அறிந்திருக்கிறது. முதுகெலும்பில்லாத எதிர்க்கட்சியாலும் எதையும் சாதிக்க முடியாது எனும் உணரப்பட்டிருக்கும் அதே வேளை இரு பக்கமும் அடி வாங்கிய அப்பாவி தமிழ் – முஸ்லிம மக்களுக்கு உலக வல்லரசுகளில் ஒன்றான ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் வருகை என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.

ஒரு சிலர் அவரைக் கடவுள் எனவும் நம்பித் தம் குறைகளை சொல்ல மேலும் சிலர் அவர் மூலமாக சர்வதேச அழுத்தத்தைக் கொண்டு வர முயல்கின்றனர். தம் சொந்த மக்களின் குறைகளைத் தீர்ப்பதிலும் ஜனநாயகத்தை நிலை நாட்டி நேர்மையாக நடந்து கொள்வதிலும் இன்றைய இலங்கை அரசு காட்டும் அலட்சியப் போக்கு அவர்களை சர்வதேச பார்வையில் சர்வாதிகாரிகளாக சித்தரிக்கிறது.

இதிலிருந்து விடுபடுவதை விட வளர்த்தெடுப்பதில் நாட்டம் கொண்ட பலம் பொருந்திய ராஜபக்ச குடும்பம் சர்வதேச நிலைப்பாட்டை புறந்தள்ளியே இது வரை செயற்பட்டு வந்திருக்கிறது.

எனினும் டேவிட் கமரூனின் விஜயம் உலக அரங்கில் மாற்றங்களைக் கொண்டுவர வல்லது. ஆகக்குறைந்தது ஐ.நாவில் பல்வேறு அழுத்தங்களை உருவாக்க வல்லது. என்றைக்கும் இல்லாத வகையில் அமெரிக்க ஊடகங்களும் பொதுநலவாய மாநாட்டைப் பற்றி பேச ஆரம்பித்துள்ளன.

David Cameron meets Tamil refugees in the welfare village of Sabapathopillaia, in northern Sri Lanka, who were made homeless during the 26 year long civil war.

2013ம் ஆண்டின் பொதுநலவாய மாநாடு பற்றி பேசப்படும் ஒவ்வொரு தடவையும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான உலக எதிர்ப்பு பற்றியும் பேசப்படும். இலங்கைக்கு எதிராக வகுக்கப்படப்போகும் அரசியல் வியூகங்களைத் தாண்டி வட மாகாண அப்பாவிப் பொது மக்களின், தம் உற்றார் உறவினர்களை இனந்தெரியாத கடத்தல்களில் பறிகொடுத்துப் பல ஆண்டுகளாகப் பறிதவிக்கும் உண்மையுள்ள உறவினர்களின் கதறல்கள் உலகின் காதுகளை எட்டுமா? அவர்களுக்கு விடை தரப்படுமா?

– மானா

Advertisements
எஸ்.றிபான் –
பல்வேறு விவாதங்கள், சவால்கள், எச்சரிக்கைகள், எதிர் பார்ப்புக்கள் மத்தியில் கல்முனை மாநகர சபையின் மேயராக செயற்பட்ட சிராஸ் மீராசாஹிப்பின் இராஜினாமா இடம் பெற்றுள்ளது. எனது மக்களின் ஆணைப்படியே செயற்படுவேன் என்று துணிந்து நின்றவருக்கு, அதில் உறுதியாக நிற்க முடியவில்லை. காரணம், சிராஸ் யாரையெல்லாம் நம்பினாரோ அவர்கள் மெல்ல மெல்ல கழுத்தறுத்துக் கொண்டிருப்பதனை உணரத் தொடங்கினார். இதனால், சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுத்து கட்சியில் கோலாட்சி செய்து கொண்டிருக்கும் சிரேஸ்டமானவர்களுக்கு இதுதான்டா அரசியல் என்று காட்டுவதற்கு சிராஸ் தவறி விட்டார்.

சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுக்கத் தவறியது மட்டுமன்றி, சரியான நேரத்தில் பிழையான முடிவினையும் எடுத்து விட்டார். ஆனால், சிராஸிற்கு வேறு வழிகளும் இல்லை. அவர் மேயர் பதவியை துறக்க மாட்டேன் என்று முரண்டுபட்டுக் கொண்டிருப்பராயின், இறுதியில் 45 நாட்களில் பெற்றுக் கொண்ட அரசியல் வெற்றியினை, அரசியலில் சாணக்கியமற்றவர் என்ற பெயரோடு, தலைக் குனிவினை (இரண்டு வருடங்களின பின்னர்) கடைசிப் பெறுமதியாக பெற்றுக் கொள்ள வேண்டியேற்பட்டிருக்கும்.
இப்போதைக்கு சிராஸ் தனது தலைக்கு வந்த கத்தியை, தலைப்பாகையுடன் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனாலும், தாமதித்து அவர் எடுத்துக் கொண்ட முடிவினால், அரசியலில் தமது காலை ஆழப்பதித்துக் கொள்ளவும், தமது கட்சிக்குள் இருக்கும் அரசியல் எதிரிகளை சமாளித்துக் கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கும் அவர் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது.
மு.காவின் அரசியல் பாதையில் இன்றைய தலைவர், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிம் கூட வாக்குறுதிகளை அளித்துள்ளார். அவற்றில் பல இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இதே போன்று கட்சியின் தலைமையிடம் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள். அவைகளில் பல இன்னும் கடனாகவே இருந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு, இருக்கின்ற நிலையில் சிராஸ் மீராசாஹிப் அளித்த உடன்பாட்டில் மட்டும் ரவூப் ஹக்கிம் கடும் போக்கையும், மூர்க்கத்தனத்தையும் ஏன் காட்ட வேண்டுமென்று சிந்திக்க வேண்டும். இதில் இருக்கின்ற பின்புலம் என்ன? என்றெல்லாம் சிராஸ் சிந்தித்து இருந்தால், அவரால் இலகுவாக முடிவினை எடுத்திருக்க முடியும்.
ரவூப் ஹக்;கிம் சிராஸின் இராஜினாமா மூலமாக பல அரசியல் நகர்வுகளை மேற் கொண்டுள்ளார். அதில் ஒன்றுதான், தனது தலைமைத்துவத்திற்கு இருக்கும் சவாலாகும். நிஸாம் காரியப்பர் மு.காவின் அரசியல் தலைமைத்துவம் கிழக்கில்தான் இருக்க வேண்டும். அந்த தலைமைக்குத்தான் கிழக்கு மக்களின் உண்மையான உணர்வுகளை அறிந்து கொள்ள முடியுமென்று கருத்துக்களை முன் வைத்து, ரவூப் ஹக்;கிமை நெருக்கடிக்குள்ளாக்கினார். நிஸாம் காரியப்பரின் இக்கருத்துக்கள் கிழக்கில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தியது. மட்டுமல்லாது, மு.காவின் தலைமைத்துவத்திற்கு நிஸாம் காரியப்பர் பொறுத்தமானவர் என்ற கதைகளும் மு.காவின் ஆதரவாளர்கள் பலரிடமும் மோலோங்கியும் இருந்தன.
மேலும், அம்பாரை மாவட்டத்தில் மு.காவின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் ரவூப் ஹக்கிமை மிரட்டும் பாணியில் அடிக்கடி தங்களின் கருத்துக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதி அமைச்சர் ஆசை விவகாரத்தில், ரவூப் ஹக்;கிம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்ததனை, வேண்டுமென்றுதான் அமெரிக்காவுக்கு போயுள்ளான் என்று மரியாதைக் குறைச்சலாக பக்கத்தில் நின்றவர்களுடன் பேசியும் உள்ளார்.
இத்தகையவர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும், நிஸாம் காரியப்பரின் ஆளுமையை வெளிக்கொணர்வதற்கும் சிராஸின் வாக்குறுதியை ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் ரவூப் ஹக்கிமுக்கு ஏற்பட்டது. தனது கருத்தை ஏற்றுக் கொண்டால், சிராஸ் அரசியலில் நன்மையடைவார் என்றும் ரவூப் ஹக்;கிம் எடை போட்டுக் கொண்டார். இதனைப் புரிந்து கொள்ளும் அரசியல் பக்குவமும், சாணக்கியமும் சிராஸிடம் இருக்கவில்லை. 45 நாட்களில் தனக்கு கிடைத்த வெற்றியை தனது முயற்சிக்கு கிடைத்த செல்வாக்கின் வெற்றி என்று சிராஸ் கணிப்பீடு செய்து கொண்டாரே அன்றி, மு.காவின் ஆதரவாளர்களின் மனப் போக்கை அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை.
அதாவுல்லாவோடு மு.காவிற்கு அரசியல் சூழ்ச்சி செய்த தவம், தனக்குரிய இடம் கிடைக்காது போன போது, அதாவுல்லாவுக்கு பாடம் புகட்ட வேண்டுமாக இருந்தால், தான் எதிரியாக நினைத்துச் செயற்பட்ட மு.காவில் இணைவதனைத் தவிர வேறு மார்க்கம் இருக்கவில்லை. மு.காவில் இணைந்தார். மு.காவின் ஆதரவாளர்களின் மனப் போக்கை அறிந்து தமது பேச்சு வன்மையால் கிழக்கு மாகாணத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இதுதான் அரசியல் சாணக்கியமாகும். மு.காவில் தவம் இணைந்து கொண்ட போது, பெரிய மாற்றங்கள் ஏற்படுமென்றெல்லாம் தெரிவிக்கப்பட்டன. ஆனால், இப்பத்தியில், அதாவுல்லாவின் அரசியல் நகர்வினை தோற்கடிக்க முடியாதென்று நாம் தெரிவித்திருந்தோம்.
அதன்படியே தேர்தல் முடிவுகளும் அமைந்திருந்தன. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அதாவுல்லா அம்பாரை மாவட்டத்தில் தமது சார்பில் 03 பிரதிநதிகளைப் பெற்;றுக் கொண்டார். மு.கா 04 பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டது. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அதாவுல்லா 03 பிரதிநிதிகளையும், மு.கா 04 பிரதிநிதிகளையும் பெற்றுக் கொண்டன. ஆதலால், தவத்தின் வரவு மு.காவிற்கு ஒரு பாரிய புரட்சியை ஏற்படுத்தவில்லை. தவம் சாத்தியமானதை சாதித்துக் கொண்டார். அதாவுல்லாவுக்கு தவத்தின் வெற்றி ஒரு அதிர்ச்சியானதாகும்.
ஆகவே, சிராஸினால் ஒரு சாணக்கியமான முடிவினை எடுத்துக் கொள்ளுவதற்கு முடியாமைக்கான காரணம், அவருக்கு சிறந்த ஆலோசனைகள் வழங்கப்படவில்லை. அவருக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கக் கூடிய அரசியல் தெரிந்தவர்கள் அவரைச் சூழ இருக்கவுமில்லை. எங்கோ நின்று கொண்டிருந்தவர்களுக்கு சிராஸ் ஒரு காய்க்கும் மரமாக தென்பட்டார். வந்தார்கள். ஒட்டிக் கொண்டார்கள். அவர்கள் சிராஸினால் பிழைப்பு நடத்த வேண்டுமென்று எண்ணினார்களே அன்றி அவரை அரசியலில் உயர்த்த வேண்டுமென்று எண்ணவில்லை. சிராஸ் அரசியலில் ஒரு உயர்நிலையை அடைய வேண்டுமென்று அவர்கள் திட்டமிட்டு இணைந்து கொண்டவர்களுமில்லை. சிராஸ் மேயர் பதவியை இராஜினாமாச் செய்தால் தங்களின் பிழைப்பு கெட்டுவிடுமென்று கணக்குப் போட்டார்களே அல்லாமல், ரவூப் ஹக்கிம் என்ன கணக்குப் போடுகின்றார், சிராஸை அரசியலில் இருந்து ஒரங்கட்ட நினைப்பவர்கள் என்ன கணக்குப் போடுகின்றார்கள் என்ற கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் சூத்திரங்களை ஆளுக்கும், இடத்திற்கும் ஏற்ப பயன்படுத்தாது, எல்லாவற்றையும் பெருக்கியே பார்த்தார்கள். இதனால்தான், சிராஸின் சமன்பாடு பிழைத்துக் கொண்டது.
இப்போதைக்கு சிராஸ் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயராவார். அவர் தமது பதவிக் காலத்தில் எப்படித் தொழிற்பட்டார் என்பதனை மக்கள் அறிவர். புதிய மேயராக அரசியலில் சிராஸை விடவும் 25 வருடங்கள் அனுபவம் கொண்டவர். நாட்டில் புகழ் மிக்க சட்டத்தரணிகள் ஒருவர். மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் மிகவும் நெருக்கமான உறவினர். சட்டத்துறையில் அஸ்ரப்பின் வழிகாட்டலில் முன்னேறிச் சென்றவர். இவர் தனக்கு கிடைத்திருக்கும் மேயர் பதவி என்ற சந்தர்ப்பத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றார் என்பதுதான் அவரின், ஆளுமையையும், திறமையையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப் போகின்றன. அவரின் அனைத்து நடவடிக்கைகளையும் சிராஸின் நடவடிக்கைகளோடு ஒப்பிட்டே பார்ப்பர். ஆதலால், நிஸாம் காரியப்பர் ஏற்றுக் கொள்ள இருக்கும் மேயர் பதவி நிச்சயமாக பஞ்சு மெத்தையாக இருக்காது.
அரசியல் என்பது மக்களோடு இருக்கின்ற நெருக்கத்தினாலும், ஆளுமையினாலும் கட்டி எழுப்பப்பட வேண்டியதொரு நுட்பமான கலையாகும். இந்த இரண்டோடு சாணக்கியமும் தேவை. இதில் எதில் குறைவு ஏற்பட்டாலும் அரசியலில் சாதிக்க முடியாது. நிலைத்திருக்க இயலாது. நிஸாம காரியப்பர் தனது தொழிலின் நிமித்தம் கொழும்பிலேயே அதிக நாட்கள் தங்கியிருக்கக் கூடியவர். சாதாரண மக்களை விடவும், உயர்மட்ட குழுக்களுடனும், தொழிலின் நிமித்தம் வருகின்றவர்ளிடம்தான் இவருடைய தொடர்புகள் பெரும்பாலும் அமைந்துள்ளன. கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக இருந்த காலத்தில் கூட சபையின் ஒரு சில அமர்வுகளில் கூட அவர் கலந்து கொள்ளாமல் கொழும்பிலும், வெளிநாடுகளிலும் இருந்துள்ளார். அந்தளவிற்கு வேலைப் பளுக்களையுடையவர். ஆதலால், அவரினால், மேயர் பதவி என்ற சிம்மாசனத்தை திறம்படச் செய்ய முடியாது போய்விடும் என்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
நிஸாம் காரியப்பரின் திறமைகள் மீது இலங்கை முஸ்லிம்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிரூபிக்க வேண்டியவாராக அவர் உள்ளார். அவர் சிறந்த சட்டத்தரணி என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால், அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி என்று இதுவரைக்கும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் அவருக்கு கிடைக்கவில்லை. அந்த சந்தர்ப்பம் இப்போது வழங்கப்பட்டுள்ளது. தமக்கு வழங்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தை நிஸாம் காரியப்பர் மிகச் சரியாக பயன்படுத்த வேண்டியவாராக இருக்கின்றார். சிராஸ் சரியான நேரத்தில் இராஜினாமாக் கடிதத்தினை தலைவரிடம் வழங்காது இருந்ததனால் எப்படி அவரின் இமேஜில் ஒரு சரிவு ஏற்பட்டதோ, அதே போன்றதொரு ஆபத்தில்தான் நிஸாம் காரியப்பரும் இருக்கின்றார். மேயர் பதவியால் தான் அலங்காரம் பெறாது, மேயர் பதவியை அலங்கரிப்பராயின் அவர் தானாகவே அலங்காரம் பெறுவார். மேயர் பதவியை பெற்றுக் கொண்டததன் பின்னர் கொழும்புதான் கதியென்று இருப்பராயின், அவர் மீது இருக்கின்ற அரசியல் ரீதியான இமேஜ் நிச்சயமாக மக்களிடமிருந்து சரியத் தொடங்கும். அதன் பின்னர் அவரால் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.
இதே வேளை, சிராஸ் மாநகர சபையில் உள்ள தனது கட்சி சார்ந்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் பின்தள்ளப்பட்டவராகவே இருந்தார். சிராஸ் தன்னை அதிகாரம் கொண்டவராக கருதிக் கொண்டமையும், உறுப்பினர்கள் சிராஸிடம் இருந்து அதிகம் எதிர் பார்த்துக் கொண்டதும்தான் இதற்கு காரணமாகும். இவை இரண்டிற்குமிடையே ஒரு சமநிலையினை ஏற்படுத்திக் கொள்வதில் எந்தவொரு கரிசனையும் அவர் காட்டவில்லை. தன்னோடு இருந்த இரண்டு உறுப்பனர்களையும், எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு மாநகர சபையை நடத்த முடியுமென்று கணக்குப் போட்டுக் கொண்டார். ஆதலால், நிஸாம் காரியப்பர் இவற்றையும் கருத்திற் கொள்ள வேண்டியவராக இருக்கின்றார்.
நிஸாம் காரியப்பர் கத்தி மேல் நடக்க வேண்டியவராகவே இருக்கின்றார். அவரின் இமேஜில் ஏற்படுகின்ற சரிவு, சிராஸின் இமேஜை சற்று அதிகரிக்கச் செய்யும் என்பதுதான் எமது தீர்மானமாகும்.
நிஸாம் காரியப்பருக்கு மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளதனால், அடுத்த பொதுத் தேர்தலில் நிஸாம் காரியப்பர் போட்டியிடுவதற்கு அதிகம் வாய்ப்புக்களில்லை. அதே வேளை, ஒரு வருடத்தின் பின்னர் நிஸாம் காரியப்பர் மேயர் பதவியை மற்றுமொருவருக்கு வழங்க இருப்பதாகவும், அவர் பொதுத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
இதே வேளை, சிராஸ் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அம்பாரை மாவட்டத்தில் மு.கா தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே ஆகக் குறைந்தது இரண்டு ஆசனங்களையாவது பெற்றுக் கொள்ள முடியும். இதனால், சிராஸிற்கு பொதுத் தேர்தலில் மு.கா சீட் வழங்கும் என்பதில் ஐயமில்லை. சிராஸ் கடைசி வேளையிலாவது ஒரளவிற்கு சரியான முடிவினை எடுத்துக் கொண்டு மு.காவிற்குள் நின்று கொண்டிருப்பதனையிட்டு அம்பாரை மாவட்டத்தில் உள்ள மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று உசாராகியுள்ளார்கள்.
மறுபுறத்தில். ரவூப் ஹக்கிமின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அவர் அம்பாரை மாவட்டத்தில்தான் அடுத்த பொதுத் தேர்தலில் குதிக்க இருக்கின்றார் என்ற அச்சம் மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பலரிடம் தெரிவித்துக் கொண்டு வருகின்றார். நமக்கான பிரதிநிதித்துவம் பறிபோய்விடும் என்றும் சில இடங்களில் பிரஸ்தாபித்துக் கொண்டும் வருகின்றார். மேலும், அடுத்த பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் தற்போதுள்ள மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் போட்டியிட உள்ளார்கள். பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை ஆகிய இடங்களில் இருந்துதான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளார்கள். இதனிடையே ரவூப் ஹக்கிம் போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றதனை எம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இப்படியாக மாறவுள்ள அம்பாரை மாவட்ட அரசியல் களத்தில் சிராஸின் நடவடிக்கைகள் என்னவாக அமையப் போகின்றதென்பது அவரின் நிதானமான போக்கே தீர்மானிக்கும். நிஸாம் காரியப்பர் தமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலேயே அவரின் அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளது. மொத்தத்தில் ரவூப் ஹக்கிம் தமது அதிரடி நடவடிக்கையால் சில அறுவடைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்.
நன்றி: விடிவெள்ளி

எந்த உயிரினத்திற்கும் இல்லாத அழகான முக வடிவமைப்பை இறைவன் மனித இனத்திற்கு அளித்துள்ளான். அந்த முகத்திற்கு மேலும் மெருகூட்டி பொலிவாக்க புன்னகை என்னும் நகையை அணிந்து கொள்ள வழி செய்துள்ளான். ஆனால், மனிதர்களிடையே காணப்படும் போட்டி, பொறாமை, உறவுகளிடையே காணப்படும் வெறுப்புணர்வு ஆகியவை அந்தப் புன்னகையை மனிதர்களிடமிருந்து காணாமல் போகச் செய்கிறது.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் காட்டும் புன்னகை அவர்களின் எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாகிறது.

பிள்ளைகள் பெற்றோர்களிடம் காட்டும் புன்னகை, வாழ்க்கையை அர்த்தமாக்குகிறது.

மருத்துவர் நோயாளிகளிடம் காட்டும் புன்னகை நம்பிக்கைக் கீற்றாக அமைகிறது.

வாடிக்கையாளர்களிடம் கடைக்காரர்கள் காட்டும் புன்னகை வியாபாரத்தை அதிகரிக்கிறது.

அதிகாரிகள் அலுவலர்களிடம் காட்டும் புன்னகை ஒற்றுமையை அளிக்கிறது. அரசியல் தலைவர்கள் மக்களிடம் காட்டும் புன்னகை ஜனநாயகத்திற்கு அடித்தளமாகிறது.

“புன்னகை எந்தப் பிரச்னையையும் நேராக்கும் வளைவுக் கோடு’ என்பார்கள். ஒரு நொடிப் பொழுதில் உள்ளத்தில் எழும் மகிழ் உணர்வு புன்னகையாக வெளிப்படுகிறது. நமது மகிழ்ச்சியை இயற்கையாக பிரதிபலிக்கும் ஒரு சக்தியாக புன்னகை விளங்குகிறது. புன்னகை நமது உடலையும் உள்ளத்தையும் இணைத்து மூளைக்குத் தகவல்களை அனுப்பி நம்மை சஞ்சலமற்ற மனதுடன் சந்தோஷத்துடன் இருக்க உதவுகிறது.

நமது மூளையின் புறப்பகுதியின் இடது பாகம் நமது சந்தோஷங்களைப் பதிவு செய்வதற்காகவே உள்ளது. தலைப் பகுதியிலுள்ள தசைகள் மூளையிலிருந்து வரும் சைகையை தாங்கி முகத்தில் உள்ள தசைகளை இயங்கச் செய்து உதட்டில் புன்னகையை தவழச் செய்து உடலை பரவசமாக்குகிறது.

நாம் சோகமாக இருக்கும்போது, நாம் முன்பு செய்த நல்ல விஷயங்களை எண்ணிப் பார்த்து புன்னகைத்தால் அது நமது உடம்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.

நாம் சந்தோஷமாக இருக்கும்போது நமது உடம்பு நல்ல எண்ண அலைகளை வெளிப்படுத்தி மனதை தூய்மையாக்குகிறது. நாம் வீசும் ஒரு புன்முறுவல் மற்றவர்களையும் புன்னகைக்கச் செய்யும். அதாவது, நாம் சிரித்தால், நம்மைப் பார்த்து உலகம் சிரிக்கும் என்பார்கள்.

நம்மைச் சுற்றி வினோதமான, கோமாளித்தனமான நிகழ்வுகள் நடக்கும் போது நம்மால் புன்னகைக்காமல் இருக்க முடியாது. நமது நண்பர்களையோ உறவினர்களையோ சந்திக்கும்போது அவர்கள் வீசும் புன்னகையால் நம்மை அறியாமைலே நாம் புத்துணர்வு பெறுவோம். அதற்கு மாறாக முகத்தைச் சுளித்து, கடுமையான பார்வையைக் காட்டினாலோ அதனால் எதிர்வினைகள்தான் ஏற்படும்.

நமது மனம் உற்சாகத்திலிருக்கும்போது, உதடு புன்னகைக்கிறது. புன்னகை மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கிறது. நாம் புன்னகைக்கும்போது நமது உடம்பிலிருந்து எண்டார்பின், செரோடினின் போன்ற இயற்கையான வலி நிவாரணிகள் சுரக்கின்றன.

உடல்வலியைக் கட்டுபடுத்த இறைவன் நமக்கு அளித்த அருமருந்து புன்னகை. அது மன உளைச்சலையும் சோர்வையும் உடல்வலியையும் போக்கும். சிறு புன்னகைதான் பெரும் சிரிப்பை வரவழைக்கும். புன்னகை இல்லாமல் சிரிப்பில்லை. சந்தோஷ சிரிப்பு நம் உடல் நலனை சீராக்குவதுடன், ரத்த ஓட்டத்தையும் சீராக்கி, சீரான தூக்கத்தையும் அளிக்கும்.

எப்போதும் புன்முறுவல் பூத்தவாறு பிறருடன் அன்பாக பழகுபவருக்கு உடல்நலப் பாதிப்பு எப்போதும் ஏற்படுவதில்லை, அதிக அளவில் புன்முறுவல் பூத்து உற்சாகத்துடன் உழைப்பவர்கள் மற்றவர்களை விட ஏழு ஆண்டுகள் இளமையுடன் இருப்பார்கள் என தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

நமது குறுநகை பிறருடைய கவனத்தை இழுக்கும் திறனுள்ளதாக அமையும். அதனால்தான் புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுக்கும்போது நம்மைப் புன்னகைக்கச் சொல்கிறார்கள்?

வேலைப் பளு காரணமாகவோ மன வருத்தம் ஏற்படும்போதோ, அல்லது பிறர் நம்மை வருந்துமாறு பேசினாலோ ஒரு சிறுநகை உதிர்த்தால் மனம் லேசாகி விடும். ஏதேனும் ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் பேராவல் ஏற்பட்டு அது கிடைக்காமல் போனால் மனம் விசாரம் கொள்ளாமல் இருக்கவும் புன்னகை உதவுகிறது. ஆபத்து வருமோ என்ற கவலையும் மனதிலிருந்து மறைகிறது. பிறரைக் கவர வேண்டுமானால் நமக்கு உயர்ரக ஆடைகளும், அலங்காரங்களும் தேவையில்லை. உதட்டில் புன்னகையை அணிந்தாலோ, அது முன்பின் தெரியாதவர்களையும், ஏன், எதிரியைக்கூட நண்பராக்கும் பாச வலையாகும்.

நாம் புதியதாக வேலை தேடிச் சென்றாலோ அல்லது பணி நிமித்தம் மற்றவர்களை பார்க்கச் போனாலோ நல்ல உடையுடன் சேர்த்து புன்னகையையும் அணிந்து செல்ல வேண்டும். நல்ல உடை மட்டும் ஒருவனைச் சிறந்தவனாகக் காட்டாது. சிடுசிடுப்பான முகத்துடன் உடை பகட்டாக இருந்தால் எந்தவிதமான பயனும் இல்லை. எனவே மற்றவர்கள் மனதில் நாம் பதிய வேண்டுமானால் அழகாக இயற்கையான முகிழ்நகையும் நம்முடன் இருக்க வேண்டும்.

புன்னகையை யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வழங்கலாம். விலையில்லா புன்னகையால் விளையும் பலன்களோ விலைமதிப்பற்றவை. புன்னகை – நல்லன எல்லாம் தரும்.

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

source: http://dinamani.com/

இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரை

 கடன் இருக்கும் நிலையில் கடனை அடைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் ஒருவர் மரணித்தால், கடன் அடைக்கப்படும்வரை அவரது ஆன்மா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். (நூல்: திர்மிதீ)

உயிர்த் தியாகிகளுக்குங்கூட கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்; ஆனால் கடன் மன்னிக்கப்படுவதில்லை (நூல்: முஸ்லிம்) போன்ற அறிவிப்புகளின்படி, கடன் அடைக்கப்பட வேண்டும் என்பது சரியே! இது ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வோருக்கு மட்டும் உள்ள நிபந்தனையல்ல. எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான விதியாகும்.

கடன் உள்ளவருக்கு ஹஜ் கடமை இல்லை என்பதையும் தாண்டி, கடனே இல்லாவிட்டாலும், ஹஜ்ஜுக்குச் சென்று வரும் பொருளாதார வசதியில்லாதவருக்கும் ஹஜ் கடமை இல்லை. அதாவது, கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை என்பதற்கான கேள்விக்கு பொருளாதார வசதியற்றவர் உள்ளாக மாட்டார். ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம் அவரிடம் இல்லை; எனவே ஹஜ் செய்யவில்லை என்றாகிவிடும்.

 ஒருவரின் ஹஜ் பயணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனும் உள்ளது. இப்போது உடனடியாகக் கடனை அடைத்து, ஹஜ் பயணத்தைத் தவிர்ப்பது சிறந்ததாகும். மரணம் எப்பவும் சம்பவிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு கடன் அடைக்கப்பட வேண்டும்.

ஆனால், கடன் உள்ளவர் இஸ்லாம் அனுமதித்துள்ள வேறு வழியில் மக்கா செல்வதற்கான வசதியைப் பெற்றிருந்தால் அவருக்குக் கடன் உள்ளது என்று வைத்துக்கொண்டாலும் அவர் இப்போது ஹஜ் செய்வது கூடுமா கூடாதா என்றால், கடன் உள்ளவர் ஹஜ் செய்யலாம் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடாக உள்ளது. கஅபா அமைந்திருக்கும் நாட்டில் இருந்தாலும், அங்குப் பணியாற்றும் நிறுவனத்தில் ஹஜ்ஜுக்கு விடுப்புக் கிடைத்தாலும், சென்றுவர பொருளாதாரம் இருந்தாலும் கடனாளி ஹஜ் செய்தல் கூடாது என்பதற்கான தெளிவானத் தடையேதும் குர்ஆன், சுன்னாவிலிருந்து நம்மால் அறிய முடியவில்லை!

பயணத்தில் உண்பதும் உடுத்துவதும் ஹலாலாக இருக்கவேண்டும் என்று பொதுவாக இஸ்லாம் கூறுவதால், இதன் அடிப்படையில் ஹஜ் பயணத்திற்கான செலவுகள் ஹலாலாக இருக்கவேண்டும். கடன் வாங்குவது ஹராம் அல்ல! அதனால் கடன் உள்ளவர் மக்கா சென்றால் அவர் ஹஜ் செய்வதற்குக் கடன் இடையூறாக இருக்கும் என்பதற்குப் போதிய தெளிவுகள் இல்லை!

ஹஜ்ஜுடைய காலத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து பேரூந்து வாகனம் மூலமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் பயணிகளுடன் வரும் பேரூந்து வாகன ஓட்டிக்குக் கடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை அவர் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவரும் குறிப்பிட்ட எல்லையை அடைந்ததும் ஹஜ் பயணிகளுடன் தாமும் இஹ்ராம் அணிந்து “லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்” என்று தல்பியா முழங்கியபடி வாகனத்தைச் செலுத்தி மக்காவிற்குள் நுழைந்து தங்க வேண்டிய இடங்களில் தங்கி, செய்ய வேண்டிய ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் இவர் உழைப்பிற்கான ஊதியத்துடன் ஹஜ்ஜை நிறைவேற்றுகிறார். அல்குர்ஆன் 2:198வது வசனத்தின் கருத்துப்படி ஹஜ்ஜின்போது நேர்மையான முறையில் அல்லாஹ்வின் அருளைத் தேடுவதில் அல்லாஹ் தடைவிதிக்கவில்லை!

அதுபோல், மற்ற நாடுகளிலிருந்து விமானம் மூலமாக வரும் ஹஜ் பயணிகளைக் கொண்டுவந்து ஜித்தாவில் சேர்க்கும் விமான ஓட்டி, அவரும் ஹஜ்ஜை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தேதியில் வந்து விமானம் புறப்படும் நாளில் வேலையை ஏற்றுக் கொள்கிறேன் என ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் அவருக்கு ஆகுமானதே!

ஹஜ் கடமை என்பது கிரியைகளைக் கொண்டு நிறைவேற்றப்படுவதாகும். “பூமியில் பரந்து சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்” என்கிற (அல்குர்ஆன் 62:10) வசனத்தினடிப்டையில் வேலைக்கென சவூதிக்கு வந்தவர் ஹஜ்ஜின் நாட்களில் மக்கா சென்று குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட கிரியைகளை நிறைவேற்றினால் அவருடைய ஹஜ் கடமையும் நிறைவேறிவிடும்.

கடன் உள்ள நிலையில் மரணித்தவருக்குக் கடன் மன்னிக்கப்படுவதில்லை. இது எல்லாருக்கும் உள்ள பொதுவானதாகும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியவருக்கும் இது பொருந்தும்!

கடனாளியாக இருந்து, அந்தக் கடனை அடைக்காமலும் வாய்ப்புக் கிடைத்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாமலும் மரணித்த ஒருவரையும் கடனிருந்தும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிவிட்டு மரணித்த ஒருவரையும் ஒப்பு நோக்கினால் இந்த உண்மை புரியும்.

ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் வாய்ப்பை வழங்கும்போது, ஆதாரமில்லாத பொருந்தாக் காரணங்களை நாமாகக் கற்பித்துக் கொள்ளாமல், மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜை நிறைவேறுவதற்கு முனைப்புக் கொள்ளவேண்டும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஆர்வமூட்டும் சான்றுகளைக் காண்போம்:

அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதுதான். அது, பெரும் பேறு பெற்றதாகவும் உலகத்தாருக்கான நேர்வழி மையமாகவும் திகழ்கிறது.

அதில் தெளிவான சான்றுகளும் மக்காமு இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் பாதுகாப்புப் பெற்றவர் ஆவார். மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் மறுதலித்தாலும் (அதனால் அல்லாஹ்வுக்கு இழப்பில்லை. ஏனெனில்) அல்லாஹ் அகிலத்தாரிடம் தேவையற்றவன் ஆவான் (அல்குர்ஆன் 3:96,97).

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பவர் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 8, முஸ்லிம் 20, திர்மிதீ, நஸயீ, அஹ்மத்)

 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, “மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே ஹஜ் செய்யுங்கள்” என்றார்கள். அப்போது ஒரு மனிதர், “ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்),அல்லாஹ்வின் தூதேர?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நான் “ஆம்’ என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடைமயாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்” என்று கூறிவிட்டு, “நான் (எதுவும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு எதை விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்)நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்தெதல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாக(த் தேவையற்ற) கேள்விகள் கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டைளயிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(முற்றாக)விட்டுவிடுங்கள்!” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 7288, முஸ்லிம் 2599, நஸயீ).

தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற கடமையான அமல்களை அறிவித்திடும் குர்ஆன் வசனங்களைப் போன்று, மேற்காணும் இறைவசனங்களும் நபிவழி அறிவிப்புகளும் ஹஜ் செய்வது முஸ்லிம்கள் மீது கடமையாகும் என வலியுறுத்துகின்றன.

கடமையான மற்ற அமல்களை நாம் வாழுமிடங்களில் இருந்தே நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால், ஹஜ்ஜுக் கடமையை, மனிதர்களுக்கென முதல் முதலாக அமைக்கப்பட்ட இறை ஆலயம் என அல்லாஹ் அறிவித்திருக்கும் மக்காவில் அமையப்பெற்ற கஅபத்துல்லாஹ்வைச் சென்றடைந்து அதைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் தங்கியிருந்து ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிட வேண்டும்.

ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்(எனக் கூறினோம்) (அல்குர்ஆன் 22:27).

இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலமாகவே அல்லாஹ் ஹஜ்ஜின் அறிவிப்பை ஏற்பாடு செய்துள்ளான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்குகிறோம். ஹஜ்ஜுக்கான அறிவிப்பைக் கேட்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக அருகிலிருப்போர் நடந்தும், தூரத்திலிருப்போர் வாகனங்களில் பயணித்தும் கஅபத்துல்லாஹ்வை வந்தடைவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ்ஜுச் செய்வது கடமையாகும்(அல்குர்ஆன் 3:97).

ஒரு முஸ்லிம் இன்று உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர் மக்காவுக்குச் சென்று வர சக்தி பெற்றிருந்தால் அங்குச் சென்று ஹஜ் செய்வது அவருக்குக் கடமையாகும். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள ‘சக்தி’ என்பது ஹஜ் கிரியைகளுக்காகத் தொலை தூரம் செல்வதால் சென்று திரும்பும் நாட்களுக்கான பொருளாதாரமும் உடல் ஆரோக்கியமும் முக்கியத் தேவைகளாகும்.

அடுத்து, தொலை தூரம் சென்று வர வாகனம் அவசியம். ‘சக்தி’ என்பதில் வாகன அவசியமும் உள்ளடங்கும். ஆகவே, ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி பெற்றோர் என்பதில் பொருளாதாரம், உடல் ஆரோக்கியம், மற்றும் வாகன வசதியும் வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், “நீ எங்களுடன் ஹஜ்ஜுச் செய்வதைத் தடுத்தது எது?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, “எங்களிடம் நீர் இறைப்பதற்கான இரண்டு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் ஏறி ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர். மற்றோர் ஒட்டகத்தை எங்களுக்காக விட்டுச் சென்றனர். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ரமளான் மாதம் வந்துவிட்டால் அப்போது நீ உம்ராச் செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ராச் செய்வது ஹஜ்ஜுக்கு நிகரான(பலனுடைய)தாகும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 1863, மேற்கண்ட அறிவிப்பு முஸ்லிம் 2408, 2409)

இதன் அறிவிப்பாளர் அதாவு ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்: “இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். ஆனால், அதை நான் மறந்துவிட்டேன்”. (அப்பெண்ணின் பெயர் ‘உம்மு ஸினான்’ என்பதாகும்).

 ஹஜ்ஜுக்குச் சென்று வர வாகனத் தேவையுள்ளது. இது அந்தந்தக் காலத்திற்கேற்ப வாகனங்கள் மாறிக்கொள்ளும். சென்று வரும் சக்தியை முன்னேற்பாடு செய்துகொள்ள வேண்டும். என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் நன்மை மிக்கது, தக்வா(என்னும் இறையச்சமே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள் (அல்குர்ஆன் 2:197).

ஹஜ்ஜுக்குத் தேவையான பொருள்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்பதில் உணவும், வாகன வசதியும் அடங்கிவிடும்.

யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள். மேலும், ‘நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்’ என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ், “(ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (என்னும் இறையச்சமே) ஆகும்” என்ற வசனத்தை இறக்கினான். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1523).

அல்குர்ஆன் 2:197வது வசனம் அருளப்பட்ட பின்னணி, தொலைவிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்வோர் தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டு செல்லாமல் மக்கா சென்று தமது தேவையை யாசித்துப் பெற்றுள்ளனர். இவ்வாறு செய்யாமல் உங்களுக்கான பொருட்களை முன்னேற்பாடாக சேகரித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. இதனால் யாசிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லலாமே தவிர, வயிற்றுப் பசிக்குக்கூட யாசிப்பது கூடவே கூடாது என்று தடைவிதிப்பதாக ஆகாது. “குர்பானி இறைச்சியை ஏழைகளுக்கும், யாசிக்காதோருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்” என்று 22:28, 36 ஆகிய வசனங்கள் கூறுகின்றன!.

சக்தி பெறுதலைத் தாமாக முயற்சி செய்து சக்தி பெறுதல் என்றும் எதிர்பாராமல் வேறு வகையில் மக்கா சென்று விடுவது என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். நாம் கவனிக்கத் தக்கது அவை ஹலாலான வழியில் உள்ளதா என்பதை மட்டுமே.

எனவே, ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஹலாலான வழியில் சக்தி வழங்கப்பட்டவர்கள், கடன் என்ற காரணத்துக்காக அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.

(இறைவன் மிக்க அறிந்தவன்).

source: http://www.satyamargam.com/1849

நேர்காணல் – ஸகசதுல்லாஹ் ஜதுரூஸ்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஸதகதுல்லாஹ் ஜதுரூஸ். ஜதுரூஸ்க்கு வயது 60. இப்போது புத்தளம் வாசி. ஆனால், அவருடைய நினைவும் கனவும் யாழ்ப்பாணத் தில்தான். 1990 இல் யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப்புலிகளின் அறிவிப்பை அடுத்து வெளியேறியவர்களில் ஸதகதுல்லாஹ் ஜதுரூஸின் குடும்பமும் ஒன்று.

நீண்டகால அகதி வாழ்க்கை – பின்னர் புத்தளத்திலேயே காணி, வீடு என்று நிரந்தர வாழ்க்கைக்கு மாறி, புத்தளம் வாசியாகிவிட்டார் ஸதகதுல்லாஹ் ஜதுரூஸ்.

20 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்துக்கு வெளியே வசித்து வரும் ஸகசதுல்ல ஜதூரோஸ் யாழ்ப்பாணத்தில் புடவை வியாபாரத்துக்காக வந்து செல்கிறார். அவருடன் கூடவே அவருடைய பிள்ளைகளும் வந்து செல்கிறார்கள்.

நடமாடும் வியாபாரியாகத் தொழில் செய்துவரும் ஸகசதுல்ல ஸதூரோஸையும் அவருடைய பிள்ளைகளையும் சந்தித்து உரையாடினேன்.

1. நீண்டகாலத்துக்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறீங்கள் – யாழ்ப்பாண நிலைமைகள் எப்படியிருக்கு? யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாகவே வருவதற்கு முயற்சிக்கவில்லையா?

யாழ்ப்பாணத்துக்கு வரும்போது எனக்கு ஏற்படும் சந்தோசத்தைச் சொல்லவே முடியாது. அவ்வளவு மகிழ்ச்சி. நெஞ்சு நிரம்பச் சந்தோசம். நான் பிறந்து வளந்த ஊர் அல்லவா! சொந்த ஊருக்கு வரும்போது யாருக்குத்தான் மகிழ்ச்சி வராது, சொல்லுங்க. எத்தனை வயசானாலும் சொந்த ஊர் எண்டால் அது சந்தோசமாத்தான் இருக்கும். நான் யாழ்ப்பாணத்தில்தான் பிறந்தேன். என்னுடைய வாப்பா, உம்மா, காக்கா, தம்பி, தங்கைச்சி எல்லாருமே யாழ்ப்பாணத்திலதான் பிறந்தாங்க. வாப்பாவோட வாப்பா, அவரோட வாப்பா எல்லாருமே யாழ்ப்பாணத்தில் தான் பிறந்து வளந்தாங்க.

நான் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் படித்தேன். அந்த நாளையில இருந்த யாழ்ப்பாணமே வேறு. அப்போது முஸ்லிம்கள் இல்லாத யாழ்ப்பாண வாழ்க்கை கிடையாது. நகை செய்வதாக இருந்தாலும் சரி, பாத்திரங்களைச் சீர்ப்படுத்திறதாக இருந்தாலும் சரி, புடவைகளை வாங்கிறதாக இருந்தாலும் சரி, வீட்டுப் பொருட்களை வாங்கிறதாக இருந்தாலும் சரி, அம்மி ஆட்டுக்கல் கொத்திறதாக இருந்தாலும் சரி எல்லாத்துக்கும் முஸ்லிம்கள்தான் தேவையாக இருந்தது.

நல்ல மதிப்பாக முஸ்லிம்கள் இருந்தாங்க. நல்ல அன்பாக தமிழர்களும் மதிச்சாங்க. அப்ப தமிழ் முஸ்லிம் என்ற பேதமெல்லாம் கிடையாது. நான் ஒரு போதுமே என்னை ஒரு முஸ்லிமாக உணர்ந்ததேயில்லை. ஆனா பள்ளிக்குப் போவோம். தொழுகை செய்வோம். அதெல்லாம் வேற. ஆனா, சந்தையில, கடைத்தெருவில, கூட்டாளிகள் வட்டத்தில எல்லாம் நாங்க எல்லாருமே ஒண்ணுதான்.

எனக்கு எவ்வளவோ நண்பர்கள் தமிழர்கள்தான். தருமலிங்கம், சின்னையா, அருமைத்துரை, குலநாயகம், எட்வேட், பொன்னம்பலம், காந்தராசா, துரை, சாமிநாதன், யோசேவ்… எண்டு ஏராளம் கூட்டாளிகள் இருந்தாங்க.

இப்ப நான் வந்து அவங்களைத் தேடினால் ஆட்களைப் பிடிக்கவே முடியவில்லை. சிலர் இறந்து விட்டார்கள். சில ஆட்கள் வெளிநாடுகளுக்குப் போயிட்டாங்க. சிலபேர் எங்கேயென்றே தெரியாது. குமாரத்தம்பி என்றவரை மட்டும் பார்த்தேன்.

நான் வந்தது அவசரமான பயணம். வியாபாரத்துக்காக வந்திருக்கிறோம். நடமாடும் வியாபாரம். பொருட்களை வைப்பதற்கும் எடுப்பதற்கும் பாதுகாப்பில்லாத சூழல். அதற்குள்தான் வீடு, காணி எல்லாத்தையும் போய்ப்பாத்தது.

பாருங்க, என்னோட இடத்திலேயே நான் இப்படி ஆயிருக்கன். ஆனா இப்ப நான் இதுக்கெல்லாம் கவலைப்படல்லை. காலம் மாறியிருக்கில்ல. நான் யாழ்ப்பாணம் வந்திருக்கிறன். ஆனா, இதுக்குள்ள நாம என்னத்தை எல்லாம் செஞ்சிருக்கம். அதுதான் முக்கியம். எவ்வளவு இழப்புகள்? எவ்வளவு சோகங்கள்? எவ்வளவு அலைச்சல்கள்? இதெல்லாம் யாருக்கு? சிங்கள ஆட்களுக்கா? இல்லையே? தமிழாட்களும் முஸ்லிங்களும் அடிபட்டா கொண்டாட்டம் யாருக்கு சொல்லுங்க?

நாம மற்றவங்களுக்கு வெற்றி வாய்ப்பைக் குடுத்திருக்கிறம். முந்தி யாழ்ப்பாணத்தில துணை மேயராக எல்லாம் முஸ்லிம்கள் இருந்திருக்கிறாங்க. பெரிய படிப்பாளிகளாக, நீதிவானாகக்கூட இருந்திருக்கிறாங்க.

ஆ, யாழ்ப்பாணத்தைப் பத்திக் கேட்டீங்க. யாழ்ப்பாணம் நல்லாத்தான் இருக்கு. ஆனா முந்திய மாதிரி இல்லை. இன்னும் அது மாறணும். அது வளராமல் அப்பிடியே இருக்கு. புத்தளத்துக்கு நாங்க போனபோது அங்கே அவ்வளவு பெரிய ரவுண் கிடையாது. ஆனா, இப்ப புத்தளத்தப் பாத்தீங்கன்னா, நீங்களே ஆச்சரியப்படுறம்.

மரம் வளருறமாதிரி கிசிகிசி எண்டு வளந்திருக்கு. ஆனா, யாழ்ப்பாணம் அப்பிடியில்ல. நாங்க போனப்பறம் இருந்த மாதிரியே இருக்கு. வளரேல்ல. எல்லா இடமும் பெரிசா ஆகிருக்கு, நம்ம இடம் மட்டும் இப்பிடியே இருந்தா மனசு தாங்குமா? ஆனா, இப்ப நிலைமை கொஞ்சம் பரவாயில்ல.

நான் யாழ்ப்பாணத்து ஆள்தான். யாழ்ப்பாணத்துக்கு வரலாம் எண்டவுடனே வந்தேன். ஆனா வீடில்லை. காணி எல்லாம் பழுதாகிட்டுது. திருத்தணும். அதுக்குப் பணம் வேணும். இப்ப யாழ்ப்பாணத்துக்கு வந்து வியாபாரம் பண்ணுறன். புள்ளைகளையும் கூட்டிட்டு வந்திருக்கிறன். ஆனா இங்க தங்க முடியாது. வீட்டைத்திருத்தணும். அதுக்குப் பிறகுதான் இங்க வரலாம். அதிலயும் பிரச்சினை இருக்கு…

2. ஏன்? மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் நீங்கள் இணைந்து கொள்ளவில்லையா? வீட்டைத்திருத்திக் கொள்ளலாம். இப்போது அதற்கான உதவிகளைச் செய்கிறார்களே!

முன்னாடி எண்டால் வந்திருக்கலாம். பத்து இருபது வருசத்துக்கு முந்தி எண்டால். இப்ப பிள்ளைகள் வளந்திருக்காங்க. நாங்க யாழ்ப்பாணத்தை விட்டுப் போகும்போது மூத்த மகனுக்கு எட்டு வயது. மற்றவனுக்கு ஆறு. அடுத்தது மகள். கைப்பிள்ளையாக் கொண்டு போனம். கடைசி புத்தளத்தில் பிறந்தான்.

எல்லாருமே புத்தளத்தில்தான் வளந்தாங்க. அவங்களுக்கு யாழ்ப்பாணம் தெரியாது. பெரிய ஆளுக்கு மட்டும் கொஞ்சம் தெரியும். அவனுக்கு ஊருக்கு வர கொஞ்சம் விருப்பம். ஆனா, அவன்ர கூட்டாளிகள் அங்க – புத்தளத்தில். மற்றவங்களுக்கும் அப்படித்தான். அங்க இருக்கத்தான் அவங்களுக்கு விருப்பம். இப்ப யாருக்குமே யாழ்ப்பாணத்துக்கு வர இஸ்ரமில்லை.

இப்ப பாருங்க என்னட நிலைமையை. நான் ஊருக்கு வர விரும்பினாலும் பிள்ளைங்களுக்கு விருப்பமில்லை. நான் மட்டும் எப்பிடி இந்த வயசான காலத்தில வந்திட முடியும்? என் பெண்டாட்டிக்கும் யாழ்ப்பாணத்துக்கு வரவும் இங்கேயே கடைசிக்காலத்தைப் போக்கவும் விருப்பம். ஆனா முடியுமா?

வீட்டைத்திருத்த வேணும் எண்டு புள்ளைகளிடம் சொல்லியிருக்கிறன். அதுக்குச் சம்மதம் சொல்லிருக்கிறாங்க. இப்ப யாழ்ப்பாணத்தில இருக்கிற வீட்டையும் காணியையும் காட்டினன்.

வீடு இடிஞ்சு போயிட்டுது. பதிவு செய்ய வேணும். ஆனா, இங்க வந்த எங்க சொந்தக் காரங்களுக்கே இன்னும் ஏராளம் பிரச்சினைகள் இருக்கு. அதைப் பாத்தா பிள்ளைகளுக்கு வேறமாதிரி எண்ணங்கள்தான் வருது.

3. மீளக்குடியேறிய யாழ்ப்பாண முஸ்லிம்களின் நிலைமை எப்பிடியிருக்கு?

நீங்க முஸ்லிம் தெருவுக்குப் போனா அதைப் பாக்கலாம். இப்படியா முந்தி முஸ்லிம்கள் இருந்தாங்க. என்னமாதிரி இருந்த ஊர். எல்லாமே இடிஞ்சு பாழாய்ப் போயிட்டுது. பாழடைஞ்ச தெருவில நடக்கவே துக்கமாக இருக்கு. சனங்கள் தங்கட வீட்டுக்கு வந்திருக்கிறாங்க. சிலபேர் கொஞ்சம் கொஞ்சமா வீட்டைத்திருத்திட்டாங்க. மத்த வீடெல்லாமே பழுதாத்தான் இருக்கு. இந்த மக்கள்ட பிரச்சினையை சுபியான் பாக்கிறார். சுபியான்தான் யாழ்ப்பாண முஸ்லிம்களின்ர தலைவரா இருக்கிறார். மத்தவங்க இங்க வாறதில்லை. அரசாங்கத்தின்ர உதவி போதாது. பழையமாதிரி எங்கட இடத்தை திருத்தி எடுக்கிறதுக்கு ஏராளம் பணம்வேணும். இந்தியா உதவிற மாதிரி முஸ்லிம் நாடுகளும் உதவணும். ஆனா, அதுக்கு அதைப்பத்தி யார் யோசிக்கிறாங்க. தமிழாக்கள்தான் இப்ப நாங்க நடத்திய கடைகளை எல்லாம் நடத்துறாங்க. சில கடைகள் மட்டும் முஸ்லிம்களுக்குத் திரும்பக் கிடைச்சிருக்கு. கஸ்தூரியார் வீதியில ஒரு நகைக்கடையும் இப்ப முஸ்லிம்களுக்கில்லை. முந்தி ஏராளம் கடைகள் இருந்தன.

இந்த மாதிரி நடமாடும் வியாபாரத்தை எல்லாராலும் செய்ய முடியமா? அல்லது எப்பவும் இப்படிச் செய்ய முடியமா? நான் கூட ஒரு வேசம் போட்டுத்தான் இந்த வியாபாரத்துக்காக வந்திருக்கிறன். இப்பிடி யாவாரம் பண்ணிறதுக்கு புள்ளைகளுக்கோ மருமகனுக்கோ விருப்பம் கிடையாது.நான் யாழ்ப்பாணம் வாறதுக்காக இந்த வியாபாரத்தை ஏத்துக்கிட்டன். அவ்வளவுதான். தமிழர்களும் முஸ்லிம்களும் நிச்சயமா நல்லமாதிரி ஒத்துமையா வாழலாம். அப்படி வாழவேணும். யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு நிறைய உதவவேணும். அதுக்குத் தமிழாக்களும் ஒத்துழைக்க வேணும்.

4. புத்தளத்தில் இப்போதும் நீங்கள் முகாம்களில்தான் இருக்கிறீங்களா?

இல்லை. நாங்க இப்ப சொந்தமா காணி வாங்கி, வீடு கட்டியிருக்கிறம். ஏராளமானவங்க இப்படி காணி வீடு எல்லாத்தோடும் இருக்கிறாங்க. இதுதான் பிரச்சினையே. அங்கேயே தொழிலையும் புடிச்சிட்டாங்க. இப்ப எல்லாருமே புத்தளம் ஆட்களாகீட்டாங்க. மூத்த ஆட்களுக்குத்தான் யாழ்ப்பாணத்துக்கு வாறதுக்கு எண்ணமிருக்கு. புள்ளைகளுக்கு அதெல்லாம் கிடையாது. அவங்க புத்தளத்தோட ஐக்கியமாகீட்டாங்க. ஆனா, அங்க கொஞ்ச ஆட்கள் இன்னம் காம்பிலதான் இருக்கிறாங்க. அவங்க குறைவான எண்ணிக்கை. அவங்களுக்கும் தொழில் அங்கதான். யாழ்ப்பாணத்தில நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தா வந்திடுவாங்க. அப்பிடி வந்து இருந்து பழகீட்டா பிறகு இங்கேயே இருந்திடுவாங்க.

5. உங்களைப் பொறுத்தவரையில் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய கவலைகள், அபிப்பிராயங்கள், கோபங்கள் எல்லாம் எப்பிடியிருக்கு?

யார் மீது யார் கோவிக்கிறது. இப்ப தராசு எந்தப் பக்கம் நிக்குது? அதான் முன்னமே சொன்னேனே நாம் அடிபட்டு எதிராளிக்கு வெற்றியைக் குடுத்திருக்கிறம் எண்டு. பழசையெல்லாம் பேசிக் கொண்டிருக்க முடியுமா? அதையே பேசிக்கொண்டிருந்தால், நாம உருப்படவே மாட்டோம். எனக்குக் கூட சின்ன வயசில எங்க வாப்பா, அவங்கட வாப்பா எல்லாம் சில கதைகளைச் சொல்லியிருக்கிறாங்க. முந்தி நாம நல்லூர்ப்பக்கம்தான் இருந்தம். பிறகு எங்கள வெட்டி விரட்டிப் போட்டங்க. அதாலதான் வந்து இந்தப் பக்கமா – இப்ப இருக்கிற சோனகக் குடிப்பக்கமாக இருக்கிறம் எண்டு. இதுக்குப் போய் இப்ப சண்டை போட முடியுமா? பழசை வைச்ச பழி வாங்கவும் சண்டை போடவும் முடியுமா? பழிதான் வளரும். புழி வளர்ந்தால் என்ன நடக்கும். அழிவு. அதானே நடந்தது. மனிசனுக்கு மன்னிக்கிற மனம் வேணும். மன்னிப்பு எண்டிறது ஏமாளியாகிறது எண்டில்ல. மன்னித்தாத்தான் மறக்கிற மனம் வரும். மறதி ஏமாளியாகிறதில்லை. மறதி இல்லை எண்டால் எப்பவும் இரத்தம்தான் பாயும். இதுவரை பாய்ஞ்ச ரத்தம் போதாதா? நாங்க யாழ்ப்பாணத்த விட்டுப் போனபோது இருந்த கோவம் இப்ப இல்லை. அந்தக் கோவத்தை பிள்ளைகளுக்கும் கொடுத்தா என்னாகும்? நாம எப்ப ஒற்றுமையா இருக்கிறது?

இனி என்ன செய்யப்போறம்? எண்டு யோசிக்கவே விரும்பிறன். முதல்ல நாங்க யாழ்ப்பாணத்துக்கு வரணுமா? வந்து இருக்கணுமா? எண்டு பாக்கணும். யுhழ்ப்பாணத்துக்கு வாறதுக்காக ஏதோ அடிமை மாதிரி எல்லாத்துக்கும் பயந்து கொண்டு நான் இதைப் பேசல்ல. நியாயமா என்ன செய்யணும் எண்டு யோசிச்சுத்தான் பேசறன். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் யாழ்ப்பாணத்து மக்கள். நாங்க யாழ்ப்பாணத்துக்கு வாறதும் யாழ்ப்பாணத்தில இருக்கிறதும் எப்படி எண்டு நாங்க யோசிக்கிறம்.

அந்த நேரம் நாங்க யாழ்ப்பாணத்தில இருந்த வெளியேற்றப்பட்டபோது எங்களுக்காக குரல் குடுத்த மற்ற இடத்து முஸ்லிம்களை நாங்க மறக்கயில்லை. ஆனா, இப்ப நாங்க இங்க வாறத அவங்க ஆதரிக்கணும்.

6. யாழ்ப்பாணத்தில் வாழ்வதற்கு உங்களுக்கு விருப்பம். பிள்ளைகளோ புத்தளத்தில் வாழத்தான் விரும்புகிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வைக் காணலாம் என்று நினைக்கிறீங்கள்?

உண்மையாக எனக்கு இப்பத்தான் துக்கம். யாழ்ப்பாணத்தை விட்டுப்போகும்போது இருந்த துக்கத்தை விட இப்ப, யாழ்ப்பாணத்துக்கு வரக் கூடிய நிலைமை இருந்தும் வரமுடியல்ல. இதுதான் பெரீய கொடுமை. பாத்தீங்களா வாழ்க்கையை? இதுதான் மனிசனுக்கு தீராத கொடுமை என்கிறது. எல்லாத்தையும் அல்லா விளையாட்டாப் பாக்கிறாரா என்று கூட யோசிப்பேன். இதில யாரைக் கோவிக்கணும். நீங்க பாக்காம விட்ட பழைய சிவாஜி படத்தை இப்ப பாக்க விரும்புறீங்க. ஆனா புள்ளைகளுக்கு விஜய் படமோ அஜித் படமோதான் புடிக்குது. உங்களால என்ன பண்ணமுடியும்? ஒரு தீர்வையும் காண முடியாம துக்கத்தோட வாழவேண்டியதான். புள்ளங்க யாழ்ப்பாணத்தில பிஸினஸைப் புடிச்சி, இங்க இருக்கிற நம்மட காணியை திருத்தணும், வீட்டைக் கட்டணும் எண்டாத்தன் எல்லாம். அந்த எண்ணத்தோடதான் இந்த வியாபாரத்தை இஞ்ச மாத்தியிருக்கன். ஆனா, புள்ளகளுக்கு புத்தளத்தில் வியாபாரத்தைப் பலமாக்கத்தான் விருப்பம். இதில யார் வெற்றியடையிறது எண்டு தெரியேல்ல.

7. மீள் குடியேறிய முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் எப்படியிருக்கிறார்கள்?

இப்பதானே வந்திருக்கிறார்கள். வந்த ஆட்கள் காணிப்பிரச்சினை எண்டு அங்கும் இங்குமாக அலைஞ்சு திரியிறாங்க. சிலபேர் உண்மையிலேயே அந்த நேரங்களில காணியை வித்துப் போட்டாங்க. வன்னியில சமாதானம் நடந்த காலத்தில இந்த மாதிரி காணியை வித்த ஆட்கள் இருக்கு. சிலபேருடைய காணியை வேற ஆட்களும் விடுதலைப் புலிகளும் பிடிச்சி வைச்சிருந்திருக்கிறாங்க. இப்ப அங்க காணிப்பிரச்சினை பெரிய பிரச்சினையா இருக்கெண்டு சொல்லிறாங்க. ஆனா இதைப்பத்தி முழுமையா எனக்குத் தெரியாது. யுhழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை காணிப்பிரச்சினை பெரிசா இல்லை. ஆனா கடைகளை எடுக்கிறது பிரச்சினை. பழைய உடன்படிக்கை எல்லாம் சரியா இல்லை. ஆட்கள் மாறீட்டாங்க. நிலைமை மாறீட்டுது. பாதிப்புத்தான். நடந்தது பெரிய போர். பெரிய பெரிய காரியங்கள். நாம கடடுப்படுத்த முடியாத சங்கதிகள். எப்பவும் மனிசன் எதையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலைமைக்குப் போறானோ அப்பவே இந்த மாதிரி துன்பங்கள்தான் கிடைக்கும். நமக்குக் கிடைச்சது அப்பிடிப்பட்ட துன்பந்தான்.

8. இருந்தாலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்யலாம் என்று கருதுறீங்கள்? அரசாங்கமோ பிற தரப்பினரோ இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு எவ்வாறு முயற்சிக்கலாம்?

அதுக்கு வழியிருக்கு. வழியில்லாமல் எதுதான் இருக்கு? முதல்ல இந்தப் பிரச்சினையை யார் பாக்கிறாங்க. அப்பிடி யாராவது பாத்தாத்தான் ஏதாவது செய்யலாம். யாரிட்டயாவது எதையாவது கேட்கலாம். யாழ்ப்பாணத்தில முஸ்லிம்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் எப்பிடி இருக்கிறார்கள் என்று யாராவது பார்க்கிறார்களா? பத்திரிகைகளில் எங்களைப்பத்தி என்ன செய்திகள் எழுதுகிறார்கள்? வருசம் வருசம் கூட்டம் போடுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நாள் என்று சொல்கிறார்கள். அட முஸ்லிம்களை மீண்டும் நல்லமாதிரிக் குடியேற வைக்கணும் எண்டு யாராவது சிந்திக்கிறாங்களா?அல்லது தமிழாக்களைத்தான் குடியேத்திறதப்பற்றி ஏதாவது உருப்படியாகப் பேசிறாங்களா? நாம மெல்ல மெல்ல எங்கள் காரியங்கள எங்கட மூளைக்கும் யோசினைக்கும் எட்டிய மாதிரிச் செய்ய வேண்டியதுதான். அரசாங்கமாவது கட்சிக்காரங்களாவது மண்ணாங்கட்டி….

9. புத்தளத்தில் எவ்வளவு யாழ்ப்பாண முஸ்லிம்கள் இருக்கிறார்கள்? அவர்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்?

அந்தக் கணக்கை என்னால் சரியாகச் சொல்ல முடியாது. ஆனா 75 ஆயிரத்துக்கு மேல எண்டு சொல்ல முடியும். அவங்களுக்கு புத்தளத்தில் காணி வீடு தொழில் எல்லாம் இருக்கு. அவர்கள் இப்போது புத்தளம் வாசிகளைப் போலவே மாறிவிட்டார்கள்.

இந்தா என்னைப் போல இந்த வயதிலயும் யாழ்ப்பாணத்துக்கு – நான் பிறந்த மண்ணுக்கு, ஓடியாடி விளையாடிய மண்ணுக்கு மறுபடியும் வரவேணம் என்ற தவிப்போட கொஞ்சப்பேர் இருக்கிறாங்க. மற்றப்படி அரைவாசிப் பேர் புத்தளத்தில்தான் இருப்பாங்க என்று படுது. மிச்ச ஆட்கள் மெல்ல மெல்ல யாழப்பாணத்துக்கு வருவாங்க. யாழ்ப்பாணமும் கொஞ்ச பெரிசா வளந்திட்டா அவங்களும் வந்திடுவாங்க. முக்கியமாக யாழ்ப்பாணத்தில முஸ்லிம்பகுதிகளில எந்த வசதியும் இல்லையல்லவா? அதாலதான் எல்லாரும் பின்னடிக்கிறாங்க. இப்ப யாழ்ப்பாணத்தில இருக்கிற – மீளக் குடியேறியிருக்கிற முஸ்லிம்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்தால் நிலைமை கொஞ்சம் மாறும். வேகமா அங்க இருந்து ஆட்கள் வருவாங்க. நானும் அதைத்தான் எதிர்பாக்கிறன். அந்த நாள் வருமா? அதை யார் கொண்டு வாறது? ஆல்லாவுக்குத்தான் வெளிச்சம். ஆனா எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கு. இப்ப நாம யாழ்ப்பாணம் வரமுடிஞ்சிருக்கிற மாதிரி அதுவும் வரும்.

கண்ணீர் விட்ட எவரும் கைவிடப்படுவதில்லை.

தகவல் : நாலுபக்கம் கிருஸ்ணமூர்த்தி அரவிந்தன்

அஷ்-ஷெய்க் கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ் நளீமி
பயங்கரவாதத்தின் வேர்கள் அறுபடவில்லை
 
கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டின் அமைதி சமாதனம் பொருளாதார சுபீட்சம் என சகல துறைகளையும் காவு கொண்டிருந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தாலும்,இனங்களுக்கிடையிலான நிரந்தர சமாதான சகவாழ்வு கிட்டிய எதிர்காலத்தில் உதயமாகும் என எவராலும் எதிர்வு கூற முடியாதுள்ளது. நன்கு ஆராயப்பட்ட அரசியல் தீர்வு ஒன்றின் அடிப்படையில்  இனங்களுக்கிடையில் நிரந்தர சமாதான சகவாழ்வு எட்டப்படும் வரைக்கும் “பயங்கரவாதம்”  ஒழிக்கப் பட்டுவிட்டதாக எந்த ஒரு சமூகமும் நிம்மதிப் பெரு மூச்சு விட முடியாது என்பதே உண்மை.
மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களத் தலைமைகளின் பேரினவாத அரசியலும்,யுத்தம் சமாதானம் இரண்டையும் சாணக்கியமாக கையாளத் தவறிய தமிழ் சமூகமும் இந்த நாட்டில் புரையோடிப்போன இன முருகல்களை பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளில் மேலாதிக்க போட்டா போட்டி இராஜதந்திர சதுரங்க விளையாட்டின் பகடைக் காய்களாக மாற்றியுள்ளன. வன்முறைகளைக் கையிலெடுத்த உரிமைப் போராளிகள் முடக்கப் பட்டிருந்தாலும் முன்னர் இருந்ததைவிட மிகவும் வேகமாக போருக்குப் பின்னரான  இலங்கையில் பயங்கரவாதத்தின் காரணிகள்  மிகவும் ஆழமாகவும் அகலமாகவும் வேரூண்டுவதனையும்  அவற்றை உரமிட்டு ஆல விருட்சங்களாய் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை என்றுமில்லாதவாறு சர்வதேச பயங்கர வாதத்திற்கு இருப்பதனையும் அறிய முடிகின்றது.
முஸ்லிம்களை இலக்கு வைக்கும் நாசகாரிகள்
இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை வட கிழக்கில் அவர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் கிடப்பில் கிடக்க தென்னிலங்கையில் நாங்கள் நமது இருப்பையும், பாது காப்பையும் மத ரீதியிலான உரிமைகளையும் கேள்விக் குறியாக்குகின்ற புதிய சவால்களை எதிர் கொண்டுள்ளோம், எமது பள்ளி வாயல்களுக்கு எதிரான  சிங்கள பௌத்த இனவாதக் குழுக்களின் அத்துமீறல்கள்,முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான பிரச்சாரங்கள் அவற்றைக் கண்டும் காணாதிருக்கும் அரசின் அசமந்தப் போக்குகள், தங்களுக்குள் பிளவுண்டு வெறும் ஆவேசத்துடனும் அறிக்கைகளுடனும்  சந்தர்ப்பங்களை சமாளித்துக் கொள்ளும் முஸ்லிம் அரசியல் வாதிகள், இன்னும் சரியான கட்டமைப்புக்கும் திட்டமிடலுக்கும் வராத தேசிய மற்றும் பிராந்திய சிவில்த் தலைமைத்துவங்கள் நாளுக்கு நாள் நிலைமைகளை மென்மேலும் சிக்கலாக்குவதாகவே தெரிகிறது.
 நிலைமை இவ்வாறு இருக்க மேலும் எமது சந்தேகங்களையும் அச்சத்தையும் அதிகரிக்கின்ற பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன, இலங்கையில் இஸ்ரேலிய தூதுவராலயம் ஒன்றைத் திறப்பதற்கான அனுமதி, இலங்கையில் அல்காயிதா மற்றும்  தாலிபான் அமைப்புக்களின் செயற்பாடுகளை சொத்துக்களை முடக்குவதற்கான சட்ட மூலம், இலங்கையிலுள்ள பள்ளிவாயல்கள், இஸ்லாமிய நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை புலனாய்வுத் துறை திரட்டுதல், போன்ற இன்னோரன்ன தகவல்கள் முஸ்லிம்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.
கேள்விக்குள்ளாக்கப் படும் முஸ்லிம்களது பூர்வீகம்
முஸ்லிம்கள் இந்த நாட்டை கொள்ளையடிக்க வந்தவர்கள், இவர்கள் இந்த நாட்டை திட்டம் தீட்டி ஆக்கிரமிக்க முணைகின்றனர், நாட்டில் பல பாகங்களிலும் திட்டமிட்டு பள்ளிவாயல்களை கட்டி வருகிறார்கள், இந்த நாட்டில் ஜிஹாத் அமைப்புகள் இருக்கின்றன, இந்த நாட்டு பௌத்தர்களை இவர்கள் திட்டமிட்டு மதம் மாற்ற முணைகின்றனர், அரபு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர் பலவந்தமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப் படுகின்றனர். அடிப்படைவாத தீவிரவாத அல்காயிதா ,லஷ்கார் எ தைபாஹ் தாலிபான் போன்ற அமிப்புகளுடம் தொடர்புடை யவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்ற பிரச்சாரங்கள் ஊடகங்கள் மூலமாகவும் பல்வேறு இணையத்தளங்கள் வாயிலாகவும் மேற்கொள்ளப் படுவதனையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.
வெளியார் சக்திகளின் உள்நாட்டு கூலிப் படைகள்
இத்தகைய  முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை அவதானிக்கின்ற பொழுதுமிகவும் திட்டமிட்ட  அரசியல் இராஜதந்திர பின்னணிகளைக் கொண்டவையாக தெரிவதோடு மாத்திரமல்லாமல் அவற்றை  கச்சிதமாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்துகின்ற  சக்திகளுக்குப் பின்னால் ஒரு சில சர்வதேச மற்றும் பிராந்திய உளவுத் துறைகளின் சம்பந்தங்கள் இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. இவ்வாறான முஸ்லிம் விரோத நடவடிக்கைகளினை மட்டுப்படுத்தவோ,அல்லது அவற்றிற்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவோ,குறைந்த பட்சம் கண்டிக்கவோ அரசாங்கம் பின்னிற்பதிலிருந்து அதிகாரத்தில் உள்ள ஒரு சிலரது ஆசிர்வாதமும் அவர்களுக்கு இருக்கின்றதா என்ற பலத்த சந்தேகமும் முஸ்லிம்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ளது.
தேசத்திற்கான  முஸ்லிம்களது விசுவாசம்
குறிப்பாக இந்த நாட்டு முஸ்லிம்களின் முக்கிய அரசியல் தலைவர்கள் எனக் கருதப் படுகின்றவர்களும் கட்சிகளும் கூட்டணி அரசின் பங்காளிகளாக இருந்து நாட்டிற்க் கெதிரான சர்வதேச சூழ்ச்சிகளில் இருந்து அரசையும் அதன் தலைமையையும் பாது காக்க பூரண ஒத்துழைப்பை வழங்குகின்ற தருணத்தில்,முஸ்லிம்களின் அதிமுக்கிய மார்க்க அறிஞர்களின் உயர் அமைப்பான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஜெனீவா வரை சென்று மத்திய அரசு சார்பாக குரல் கொடுத்து  தேசத்திற்கான தமது  விசுவாசத்தை வெளிப்படுத்தி இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறான அத்துமீறல் நடவடிக்கைகளில் ஒரு சில  சிங்கள பௌத்த அடிப்படைவாத, தீவிரவாத சக்திகள் செயற்படுவதும் அதனை அதிகாரத்தில் உள்ளவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதுவும் முஸ்லிம்களை ஆத்திரம் அடையச் செய்துள்ளது மாத்திரமன்றி கூட்டணி அரசில் முஸ்லிம் பங்காளிகளுக்கு இருக்கும் செல்வாக்கு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
நீதித் துறையை கையாளும் இனவாத சக்திகள் 
சவுதி அரசினால் கிழக்கிலங்கையில் 2004 சுனாமியால் பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கவென கட்டிக் கொடுக்கப் பட்ட தொடர்மாடி வீடுகளை பயனாளிகளுக்கு பங்கிடாது தடுத்து நிறுத்த ஹெல உறுமய எனும்  பௌத்த மதவாத சிங்கள இனவாத கட்சியொன்று இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் வரை சென்று தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது அன்று அரசின் அமைச்சரவையில் அந்த வீடமைப்புகளுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சரால் கூட எதுவும் செய்ய முடியவில்லை, இன்றும் பொது முன்னணி அரசில் பல்வேறு முஸ்லிம் தரப்புகள் பங்காளிகளாக இருந்தும் அரசியல் அழுத்தம் மூலம் தடியுத்தரவை மீளப் பெறவோ அல்லது மாற்று இடங்களை பெற்றுக் கொடுக்கவோ அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கவோ முடியவில்லை என்பதும் நாம் அறிந்த விடயமாகும்.
இரண்டாம் தரப் பிரஜைகளாக முஸ்லிம்கள்
போருக்குப் பின்னர் துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் வடகிழக்கில் இடம் பெயர்ந்த தமிழ்  மக்கள் உடனுக்குடன் மீள் குடியேற்றம் செயப்படுகின்ற அதேவேளை ஆங்காங்கே  சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெற்று வருகின்றன,அனால் இடம்பெயர்ந்த முஸ்லிம்களைத தமது பூர்வீக வாழ்விடங்களில்  மீள் குடியேற்றம் செய்ய முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம்களிடம் இருந்து சதகாவையும் சகாத்தையும் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்குமளவுக்கு முஸ்லிம்களது விவகாரங்கள் தென்னிலங்கை அரசினால் கையாளப்படுகின்றமை இன மத பாகுபாடு எனும் “பேரின பயங்கரவாதம்” இன்னும் இந்த நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதனை எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறு முஸ்லிம்களுக்கெதிரான அச்சுரத்தல்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம், ஆனால் இந்த நிகழ்வுகளையும் அவற்றின் பின் புலன்களையும் கவனாமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் தலைமைகள் எடுக்காவிடின் நாம் காலம் கடந்து கைசேதப் படவேண்டிய நிலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
அச்சுறுத்தல்களின் பின் புலன்கள்
ஏற்கனவே நாம் கூறியது போல் தொடர்தேர்ச்சியாக இடம் பெறுகின்ற முஸ்லிம்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் அத்துமீறல்கள் மிகவும் கச்சிதமாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப் படுவதாகவே எமக்கு புலனாகிறது.
அத்தகைய  அச்சுறுத்தல்களுக்கும்  அத்துமீரலகளுக்கும்  பின்னால்  அரசியல் இராஜதந்திர வேலைத்திட்டம் இருப்பதாகவே தெரிகிறது.
இந்த நாட்டின் இன முருகல்களை தமது நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்ற பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளும் உளவு நிறுவனங்களும் முஸ்லிம்களுக்கெதிரான வேலைத்திட்டங்களுக்காக உள்நாட்டு இன மற்றும் மதவாத சக்திகளை கூலிக்கு அமர்த்தியிருக்கின்றனவா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன?
சர்வதேச பயங்கரவாதம்  இங்கு கால் பதிக்கிறது
பயங்கரவாதத்திற்கு எதிரான போர்வையில் அமெரிக்காவும் நேச நாடுகளும் இஸ்ரேலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கொள்ளுகின்ற சதி நாசகார வேலைத்திட்டங்கள் இலங்கையிலும் முடுக்கிவிடப்பட்டுல்ளனவா என்ற  நியாயமான ஐயங்களும் தோன்றியுள்ளன.
அல்காயிதா தலிபான் லஷ்கர் எ தைபாஹ் போன்ற இன்னோரன்ன ஜிஹாத் அமைப்புகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்கான சர்வதேச ஒத்துழைப்பு எனும் பேரில் இலங்கையில் அறிமுகப் படுத்தப் படுகின்ற புதிய சட்டவாக்கங்கள் இஸ்லாமிய அறிஞர்களையும் இயக்கங்களையும் நிறுவனங்களையும் முஸ்லிம்களையும் எதிர்காலத்தில் இலக்கு வைப்பதற்கான முன்னெடுப்புக்களா என்ற வலுவான சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
 இன்றைய  உலகில்  மேலைத்தேய மேலாதிக்க சக்திகளும் உளவுத்தாபனங்களும் மத்திய கிழக்கிலும், ஆசியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் தமது செல்வாக்கை அரசியல் இராணுவ பொருளாதார இராஜ தந்திர நோக்கங்களுக்காக விஸ்தரிப்பதற்கான நியாயங்களை தேடுவதோடு அதற்கான கள நிலவரங்களை கச்சிதமாக திட்டமிட்டு ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக தென்கிழக்காசியாவில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதில் அமெரிக்காவும் நேச நாடுகளும் அதிக கரிசனை கொண்டுள்ளன.
ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திகளின் தலையீடு
போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கை அரசு மேலைத்தேய நலன்காக்கும்  நோர்வேயினையும் மேலைத்தேய மேலாதிக்க சக்திகளையும் புறம்தள்ளி இந்தியா சீனா பாகிஸ்தான் ஈரான் போன்ற பிராந்திய சக்திகளின் ஒத்துழைப்பை நாடியமை மேற்குலகுடனான ஒரு பனிப்போரை ஏக காலத்தில் தோற்றுவித்திருந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இலங்கையில் அதிகரிக்கும் அமெரிக்க செல்வாக்கு அச்சுறுத்தல் என்பதனால் இலங்கை அரசின் யுத்த நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வேற்றுமைகளுக்கு மத்தியிலும் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதேவேளை இரண்டு பிராந்திய சக்திகளும் இலங்கையில் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதில் போட்டியிட்டுக் கொண்டும் இருந்தன.
 எனினும் யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் இலங்கை அரசுக்கெதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச் சாட்டுகள் என்பவற்றை ஐக்கிய நாடுகள் தாபனத்திலும் மனித உரிமை ஆணையத்திலும் முடுக்கிவிட்ட அமெரிக்கா தமிழ் நாட்டு மக்களின் மனோ நிலையை மிகவும் சாணக்கியமாக கையாண்டு இந்தியாவையும் தனது பிராந்திய வேலைத் திட்டத்திற்காக வளைத்துப் போட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை அமெரிக்க உதவியுடன் மட்டுபடுத்துவதற்காக இந்தியாவும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க இணங்கியுள்ளது.
இந்தியாவிற்கும் அமெரிக்கவிற்கும் இடையில் இருதரப்பு நலன்கள் பல இருந்தாலும்பாகிஸ்தானிய  காஷ்மீரிய மற்றும்  இஸ்லாமிய தீவிரவாதிகளை முடக்குவதற்கு  “பயங்கரவாதத்திற் கெதிரான போராட்டம்” என்ற பெயரில் அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் பயன் பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவும் இராஜ தந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
பிராந்தியத்தில் அமெரிக்க இஸ்ரேல் ஒத்துழைப்பு
1980 களில் இந்திய நலன்களுக்கெதிராக இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகரிப்பதனை  இந்தியா விரும்பாததாலும் இந்திய இலங்கை உடன்படிக்கை அது குறித்த தெளிவான ஷரத்துகளைக் கொண்டிருந்ததாலும் அமெரிக்க இஸ்ரேலூடாக இலங்கைக்கு இராணுவ ஒத்துழைப்புக்களை வழங்கியமையும் இஸ்ரேல நலன்காக்கும் பிரிவை தனது தூதுவராலயத்தில் திறந்தமையும் நாம் அறிந்த விடயமாகும், அதே போன்று இன்றும் அமெரிக்கா இந்தியாவின் முதுகுக்குப் பின்னால் தனது நலன்களைக் காக்கும்  இஸ்ரேல தூதுவராலயத்தை  இலங்கையில் திணிப்பதாகவே தெரிகிறது. இவ்வாறான முக்கூட்டு ஒத்துழைப்பு இலங்கை விவகாரத்தில் இடம் பெறுகின்ற சூழலில் மூன்று தேசங்களினது உளவு தாபனங்களின் செல்வாக்கும் செயற்பாடுகளும் இந்த நாட்டில் அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒரு நகர்வாகும்.
இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கான ஜே எஸ் பீ சலுகைகளை நிறுத்தி, சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி மற்றும் உதவி வழங்கும் நாடுகளின் நெருக்கடிகளை அதிகரிக்கச் செய்து; ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமரிக்கா விதித்த கையோடு எண்ணெய் இறக்குமதிக்கு பல நேச நாடுகளுக்கு சலுகை வழங்கினாலும் இலங்கைக்கு சலுகைகளை வழங்காது ஒரு செயற்கையான பொருளாதார  நெருக்கடியை இலங்கை மீது திணித்து தற்போது இலங்கையை ஓரளவு பணியச் செய்துள்ளது, ஈரானின் அணுசக்தி அபிவிருத்தி நடவடிக்கைகள் மத்திய கிழக்கு அமைதிக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் அமெரிக்கா யூத சியோனிச வேலைத் திட்டம் ஒன்றையே முன்னெடுப்பது உலகறிந்த உண்மையாகும், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும், இன்று பாகிஸ்தானிலும் மூக்குடைபட்டுள்ள அமெரிக்க இராணுவ நோக்கங்களுக்காக இலங்கையின் கடல் வான் பரப்புகளையும் இலங்கை அரசின் ஒத்துழைப்பையும் என்ன விலை கொடுத்தேனும் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.
இருதலைக்  கொல்லி பனிப்போர்
துரதிஷ்ட வசமாக இலங்கை இருதலைக்  கொல்லி பனிப்போர் ஒன்றினுள் இன்று சிக்கித் தவிப்பதாகவே தெரிகிறது, ஒருபுறம் அமெரிக்க முஸ்லிம் உலகுடன் மேற்கொள்ளும் பனிப்போர் மறு புறம் அமெரிக்க சீனாவுடனும் ஆசிய நாடுகளுடனும் மேற்கொள்ளுகின்ற பனிப்போர், உண்மையில் தமிழ் மக்களது நலன்களை அமெரிக்க தூக்கிப் பிடிப்பதும், சிங்கள தேசத்தின் நலனை சீனா தூக்கிப் பிடிப்பதும் இறுதியில் இந்த தேசத்தின் பாரிய அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க மேற்கொல்வதற்கு இலங்கையின் துறை முகம், விமான நிலையங்கள்  பாவிக்கப் படின் சீனா அதற்கு எதிப்புத் தெரிவிக்கும் , அதே போன்று அல்காயிதா தலிபான் போன்ற சக்திகள் இலங்கைக்குள்ளும் ஊடுருவலாம் என்ற எடுகோளில் இன்று முன்னேற்பாடுகள் இலங்கை அரசின் மீது திணிக்கப் படுவதாகவே தெரிகிறது.
இலங்கையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தமது இருப்புக்கான நியாயங்களைத் தேட வேண்டும், இப்பொழுது போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது,இராணுவ மற்றும் நிபுணத்துவ ஒத்துழைப்பு களுக்கான  சந்தை வாய்ப்பு குறைந்துள்ளது, எனவே ஈராக்கில் இரசாயன உயிரியல் ஆயுதங்களைத் தேடியது போல், ஆப்கானில் பின் லாதைனத் தேடியது போல்,  ஈரானில் அணு குண்டினைத் தேடுவது போல் இலங்கையில் அல்காயிதாவையும் தலிபானையும் தேட வேண்டிய கட்டாயம் அமெரிக்க இஸ்ரேல் போன்ற யூத கிறிஸ்தவ சர்வதேச சதிகாரர்களுக்கு இப்பொழுது ஏற்பட்டுள்ளது, அதற்கான கூலிப் படைகள் அண்மைக்காலமாக தமது வெள்ளோட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது.
பள்ளி வாயல்களுக்குள் பலிக்கடாவாகும் முஸ்லிம்கள்

இலங்கையில் எங்கோ ஒரு மூலையில்,ஆற்றங்கரையில் நடைபெறுகின்ற ஒரு இஸ்லாமிய அறநெறிப் பயிற்சி முகாமில் கூட எதிர்காலத்தில் சதிகாரர்கள் ஆயுதங்களைக் கண்டு பிடிக்கும் அற்புதங்களை நிகழ்த்தலாம், பள்ளி வாயல்களுக்கெதிரான ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது தொப்பி போட்ட சதிகாரர்கள் தாக்குதல் நிகழ்த்தி முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் இருப்பதாக உலகிற்கு சொல்லலாம், அல்லது உணர்ச்சி வசத்தால் பொங்கியெழும் இளைஞர்களை சிலர் தவறான பாதையில் வழி நடாத்தலாம், பள்ளிவாயல்களின் இமாம்களின் அறைகளில் கூட கிரனைட்டுகளையும் கைக்குண்டுகளையும் அதி நவீன ஆயுதங்களையும் சதி நாசகார சக்திகள் கையேடு கொண்டு வந்து கண்டு பிடிக்கலாம் ; ஆயுதமொன்றை ஆயுளில் கண்டிறாத மார்க்க அறிஞர்கள் கூட ஆயுதங்களுடன் கைது செய்யப் படலாம்!, முஸ்லிம் சமூகத்தின் மீதும் முஸ்லிம் உம்மத்தின் மீதும் அக்கறை கொண்ட இஸ்லாமிய நிறுவனகள் கல்விமான்கள் குறிப்பாக சதிகாரர்களை இனம்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் அறிஞர்களைக் கூட பல்வேறு கெடுபிடிகளுக்கு ஆளாக்கலாம், இவைகள் வெறும் கற்பனைகள் அல்ல முஸ்லிம் உலகில் நாள் தோறும் அரங்கேறும் அக்கிரமங்கள்.

கடந்த பல தசாப்தங்களாக பிராந்திய மற்றும் சர்வதேசிய சக்திகளின் நலன்களுக்காக இந்த நாட்டில் நிலவிய இன முறுகல்கள் கையாளப் பட்டதனால் இந்த நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்தது, ஆனால் தற்காலிக வெற்றிக் களிப்பில் தென்னிலங்கை அரசியல் சக்திகள் திளைத்திருந்தாலும் மிகவும் நூதனமான புதிய சவால்கள் இந்த தேசத்தின் அமைதியையும் சமாதானத்தையும் காவு கொள்ள “சர்வதேச மேலாதிக்க பயங்கரவாதம்” வலை விரித்து சாமர்த்தியமாக காய்களை நகர்த்துவதனை அவதானிக்க முடிகின்றது,  இந்த நாட்டில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மாத்திரமன்றி தற்பொழுது தென்னிலங்கை சிங்கள பௌத்த மக்கள் கூட மேலைத்தேய மேலாதிக்க சக்திகளினதும் பிராந்திய சக்திகளினதும் கெடுபிடிகளுக்குள் பல்வேறு பரிமாணங்களில் உள்வாங்கப் பட்டுள்ளனர்.
முஸ்லிம்களால் சவால்களை முறியடிக்க முடியும்
இந்த சவால்களுக்கு முஸ்லிம்கள் மிகவும் சாணக்கியமாகவும் சமயோசிதமாகவும் முகம் கொடுக்க முடியுமாயின் சகல சவால்களையும் முறியடிப்பது மாத்திரமல்ல அவற்றை சந்தர்ப்பங்களாக மாற்றியமைக்கவும் எல்லாம் வல்ல இறைவனின் துணையால் முடியும் என்பதில் சந்தேகமில்லை. முஸ்லிம்களது விழிப்புணர்வும் சமயோசிதமான இராஜதந்திர நகர்வுகளும் இந்த நாட்டின் அடுத்த சமூகங்களையும் சர்வதேச பிராந்திய மேலாதிக்க சக்திகளின் பயங்கரவாத  கெடுபிடிகளில் இருந்தும் இன்னும் பலதசாப்த கால அழிவுகளில் இருந்தும் விடுவிக்கும் என நம்ப முடியும்.
இஸ்லாத்தை நோக்கி வேகமாக விரையும் உலகம்
இன்று மேற்குலகெங்கும் இஸ்லாம் அதி வேகமாகப் பரவி வருகிறது அறபு நாடுகளில் அறபு வசந்தம் எனும் இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது, இனி வரும் காலங்களில் உலகின் அதிபெரும் சக்தியாக முஸ்லிம் உம்மத் திகழப்போகிறது, மேலைத்தேய ஏகாதிபத்திய சக்திகளும் யூத சியோனிச சக்திகளும் இஸ்லாமிய உலகிற்கெதிரான சிலுவைப் போர் ஒன்றை முடுக்கி விட்டுள்ளார்கள், இலங்கையில் முஸ்லிம்கள் இரு மதம் பிடித்த யானைகளின் மோதல்களுக்கிடையில் பற்றைகளாய் சிக்கித் தவித்தது போல் இஸ்லாமிய உலகுடனான  ஏகாதிபத்திய சக்திகளின் சிலுவைப் போரில் இலங்கை போன்ற சிறிய ஒரு நாடு பிழையான தரப்புகளுடன் கைகோர்த்து சின்னா பின்னமாவதை இந்த நாட்டு முஸ்லிம்கள் அனுமதிக்க முடியாது.
தாண்டப் பட வேண்டிய மிகப் பெரிய தடைக்கற்கள்      
தற்போதைய நிலையில் தமக்குள்  பிளவுண்டு தனி நபர் வேலைத்திட்டங்களை முன்வைத்து பாமரத்தனமான அரசியல் செய்கின்ற முஸ்லிம் அரசியல் வாதிகளும், அரசியல் இராஜ தந்திர நகர்வுகளை சரியான கோணத்தில் புரிந்து கொண்டு சமூகத்திற்கான சரியான வேலைத்திட்டங்களை சரியான நேரத்தில் முன்வைக்க வல்ல நிபுணத்துவ தகைமைகள் கொண்டதொரு பலமான சிவில் சமூக அழுத்தக் குழு ஒன்று இல்லாமையும், முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய இயக்கங்களாக தமக்குள்  கருத்து வேறுபாடுகளாலும் அணுகுமுறை வேறு பாடுகளாலும் பிளவுபட்டு செயற்படுகின்றமையும்  இன்று எமக்கு முன் உள்ள பிரதான சவால்களாகும்.
இந்த நாட்டில் தென்னிலங்கையில் உள்ள தேசியக் கட்சிகள் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முஸ்லிம் அரசியல் வாதிகளையும் குழுக்களையும் கறிவேப்பிலையாகவே பாவித்து வந்துள்ளனர், அதற்கேற்றாற்போல் முஸ்லிம் அரசியல் வாதிகளும் குழுக்களும் விலை போயுமிருக்கிறார்கள்,  முஸ்லிம்களைப் பொறுத்தவரை இராமன் ஆண்டாலென்ன  இராவணன் ஆண்டாலென்ன  இடையே வந்த கெரில்லா தான் ஆண்டாலும் நாம் ஐக்கியப் பட்டு ஒரே குரலில் தேசிய சர்வதேச அரங்கில் அரசியல் இராஜ தந்திர நகர்வுகளை மேற்கொள்ளாத வரை, அதாவது நமது நிலைமைகளை  சீர் செய்து கொள்ளாதவரை எல்லாம் வல்ல இறைவன் கூட நமது தலைவிதியை மாற்றியமைக்கப் போவதில்லை

2012ன் மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் இலங்கையின் இனங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு கவலை நிறைந்த மாதங்களாகவே தெரிகின்றன, ஜெனிவாவின் 19ம் மனித உரிமை தொடரமர்வு மார்ச்சில் இலங்கை அராசாங்கத்தை சங்கடத்தில் மாட்டிவைத்தாலும் இந்த விடயம் தங்களை குறிவைத்த அமெரிக்காவின் ஒரு அச்சுறுத்தலாகவே அனேக சிங்கள மக்கள் கருதுகின்றனர். அதே போல் எதைவிடவும் மதத்தையே முதன்மைப்படுத்தும் முஸ்லீம்களின் மத உரிமை வெட்டவெளிச்சத்தில் பறிக்கப்பட்ட மாதமாக ஏப்ரல் அமைந்துவிட, யாழ்பாண மேதின ஊர்வலத்தில் தமிழ் தேசிய கூட்டணியினரின்(TNA) சம்பந்தர் சிங்கக் கொடியேந்தியது கணிசமான தமிழரிடையே கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்திய விடயமாகும்.

இப்படி மே இறுதியில் இடம்பெற்ற சரத் பொன்சேக்காவின் விடுதலையைத் தவிர அனைத்து நிகழ்வுகளும் சம்பந்தப்பட்டோருக்கு சந்தோஷப்படக் கூடியதாக இல்லை. இந்த நான்கு விடயங்களுக்கும் ஒன்றோடொன்று சம்பந்தம் உள்ளாதா இல்லையா என்பதைவிட சம்பந்தப்பட்டவர்கள் அல்லது சந்தர்பம் பார்த்திருந்தவர்கள், அதாவது கொழும்பு, ஜெனிவா, தம்புள்ளை, யாழ், சென்னை, டெல்லி, வொசிங்டன், இவற்றை எவ்வாறு தமது சுய இலாபத்துக்காக கையாள்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்ள எடுக்கும் முயற்சியே இந்தக் கட்டுரை.

இலங்கை அரசாங்கம் தன் சொந்த விருப்பில் அமைத்ததுவே கற்றறிந்த பாடங்களுக்கும் நல்லிணக்க மீள்ளிணைவிற்குமான ஆணைக்குழு(LLRC) என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அந்த ஆணைக்குழு எதற்காக நியமிக்கப்பட்டதோ அதை ஓரளவேனும் செய்து தனது முடிவுகளையும் பரிந்துரைகளையும் பதிவாக்கியுள்ளது. இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் மிக சிறிய, சுபலபமாக அடைய முடியுமான ஒன்றையாவது நிறைவேற்ற அரசாங்கம் ஆரம்பித்திருந்திருந்தாலே ஜெனிவாவில் மூக்குடைபட நேர்ந்த சம்பவத்தை நிவர்த்தி செய்திருக்கலாம். அரசாங்கத்தின் அதீத நம்பிக்கையா (overconfident) அல்லது அவசர புத்தியில்(hastily)செய்யப்பட்ட விடயமா அதன் இன்றைய நிலைக்குக் காரணம் என்பதை அரசாங்கம்தான் முடிவு செய்யவேண்டும். ஆனாலும் மார்ச்சில் அமெரிக்காவுக்கு சவால் விட்டவர்கள் மேயில் பரிவாரங்களுடன் அமெரிக்கா சென்று விளக்கங்கள் வைத்ததென்பது நம் ஊர் பாஷையில் சொல்வதானால் “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்பது போலாகும். இருந்தும் இப்படியான விடயங்கள் மூலம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படாத பல பரிந்துரைகளோடு சேர்த்து இதையும் கட்டி பக்குவமாக வைக்க எடுக்கும் முயற்சியாகவே படுகின்றது. அதை உறுதிபடுத்தும் அறிவித்தல்தான் இந்த பரிந்துரைகளை பரிசீலிக்கவென இன்னொரு ஆணைக்குழுவை நியமிப்பதற்கான ஆலோசனை. ஆக ஒட்டுமொத்த நாட்டு மக்களின் அமைதியான வாழ்வில், நாட்டின் உறுதியான வளர்ச்சியில், எதிர்கால சந்ததியினருக்கான பிரச்சினையில்லாத அரசியல் தளமொன்றுக்கான ஏற்பாடுகளை செய்வதை விட்டுவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் சம்பந்தமில்லாத விடயங்களில் தம்மை ஈடுபடுத்தியுள்ளமை மிகவும் கவலைக்குறிய விடயமே.

ஜெனிவாவில் அமெரிக்காவின் அழுத்தம் தமிழரின் பால் ஏற்பட்ட அனுதாபத்தை விட இலங்கையில் சீனாவின் அதீத கரிசனையால் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மூக்கு நுழைச்சலுக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை நிவர்த்திக்க எடுத்த அதிரடி நடவடிக்கையே. இதன் தொடர் பாகங்கள் அனேகமாக இலங்கையை நேரடியாக அச்சுறுத்துவதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எனவே அமெரிக்காவுக்கு அடங்கிப்போவதன் ஊடாக இலங்கை தன்னை சுதாகரித்துக் கொள்ளலாம் என்று அமெரிக்கா இலங்கைக்கு அவகாசம் கொடுத்துள்ளது. ஆனால் அதை விளங்கி செயல்படும் நிலையில் இலங்கை இல்லை.

ஆகவேதான் அபிவிருத்தி அபிவிருத்தி என்று நாட்டின் அபிவிருத்தி ஒன்றே அனைத்து பிரச்சினைகளுக்கும் பரிகாரம் என்பதுபோல் அரசாங்கம் நடந்து கொள்வது நகைச்சுவையாகவுள்ளது. நாட்டின் அபிவிருத்தியில் நாட்டம் கொள்வதும், 21ம் நூற்றாண்டின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாவிட்டாலும் அதை நோக்கி பயணிப்பதும் முக்கியமென்றாலும், நாட்டின் உண்மை பொருளாதார நிலை தஸ்தாவேஜிகளில் காட்டப்படுவதை விட வேறுவிதமாகவே அமைந்துள்ளதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கிறீஸ்(Greece) பண நெருக்கடியில் சிக்கி நாட்டின் கஜான காலியாகிவிட்ட நிலை இலங்கை தன் போக்கை மாற்றாதவரை அதற்கும் ஏற்படுவது தவிர்க்கமுடியாதவிடயம் என்பதை அறிவது இந்த கொழும்பு அரசியல்வாதிகளுக்கு புரியாத ரகசியமாக இருப்பதும் அதிசயமே. ஆகவே முழுதான ஒரு பூசணிக்காயை அல்ல பல பூசணிக்காய்களை சோற்றுக்குள் புதைக்கும் முயற்சியே இந்த அபிவிருத்தி மந்திரம்.

நிற்க, தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் ஆத்திரமடைந்த அமைச்சர்களும் அவர்களின் ஆவேச பேச்சுக்களும், ஜானாதிபதியின் கிழக்கு மாகாணசபை கலைப்பும், புதிய தேர்தலும் என்று கசிந்த முடிவுடன் தானாகவே அடங்கி ஒடுங்கிவிட்டது. அதைவிட அந்த விடயத்தை தாங்களே முன்னின்று மறைத்த சம்பங்கள்தான் நீதீயமைச்சர் “இது முடிவு எட்டப்பட்ட விடயம் இதை திரும்பத்திரும்ப கதைப்பது குப்பையை கிளறும் முயற்சி போன்றதாகும்” என்ற விவாதம். ஆனால் கைத்தொழில் அமைச்சரோ ” பள்ளி இருந்த இடத்திலேயே இருக்கிறது, அது தொடர்ந்தும் அங்கேயே இருக்கும்” என்றார். ஆக நீதியமைச்சருக்கு “குப்பை”யாகிவிட்ட விடயம், கைத்தொழில் அமைச்சரைப் பொறுத்தவரை “அங்கேயே இருக்கும்” என்ற உறுதிமொழியில் ” எவ்வளவு காலத்துக்கு” அங்கேயே இருக்கும் என்ற நியாயமான கேள்விக்கு அவரிடம் பதில் இருக்குமென்று கருத இடமில்லை.

இது இவ்வாறிருக்க இலங்கையின் கிழக்கை எடுத்துக் கொண்டால், கிழக்கு மாகாணத்துக்கான முதலமைச்சர் பதவி ஒரு முஸ்லிமுக்கு வரவேண்டியது தவிர்க்க முடியாத ஒரு கட்டாயம். ஆனாலும் தம்புளையையும் உத்தேச முதலமைச்சர் பதவியையும் காட்டி முஸ்லீம்களை மறைமுகமாக பயமுறுத்துகிறது, பணயம் வைக்கின்றது அரசாங்கம். இந்த பயமுறுத்தலின் நீண்டகால எதிர்விளைவுகளை கணக்கில் எடுக்காமல் நானா, நீயா போட்டியில் இறங்கிவிட்டார்கள் நீதியமைச்சரும், கைத்தொழில் அமைச்சரும். போட்டியின் உச்சத்தில் தேவைப்பட்டால் மாற்று நடவடிக்கை ஒன்றுக்கு அவர் தயாராய் இருப்பதாகவும் அறியக்கிடக்கிறது. ஆனால் கைத்தொழில் அமைச்சருக்கு அரசாங்கத்தைவிட்டு நகர முடியாத அளவுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய “நன்றிக் கடன்கள்” உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஆகவே அரசாங்கம் காலாலிட எண்ணியுள்ள உத்தரவை அவர் தலையால் செய்துமுடிக்க தயார் நிலையில் இருப்பதும் கண்கூடு.

இந்த இருவரின் அல்லது இன்னும் பல முஸ்லிம்களின் கிழக்கு மாகாண சபைக்கான போட்டியால் முஸ்லிகளின் வாக்குகள் பிரிந்து மீண்டும் தமிழ் முதலமைச்சர் ஒருவரே வந்துவிட வாய்ப்பிருப்பினும், அப்படி வரக்கூடாது என்ற கட்டாயம் எதுவும் இல்லையென்பது ஒரு புறமிருக்க, ராஜபக்ஷ அரசாங்கத்தை ஓரங்கட்ட ஐக்கிய தேசிய கட்சி கட்டும் வியூகம் சற்று சிந்திக்கவைக்கிறது. இங்கேதான் டெல்லியும், வொசிங்டனும் ரனில் விக்கிரமசிங்காவுக்கு பக்கதுணையாக நிற்கின்றன. சம்பந்தரின் சிங்கக்கொடி தூக்கல் இந்த பின்னணியில் நிகழ்ந்தாக அறியக்கிடைக்கிறது. இதோடு சேர்த்துப் பார்க்கவேண்டிய விடயமே “தமிழர் தனி நாடு கேட்டு எம்மை தெரிவு செய்யவில்லை, ஆகவே நாமும் தனி நாடு கேட்கவில்லை” என்ற த.தே.கூ(TNA)யின் திடீர் அறிவிப்பு. அப்படியானால் சம்பந்தருக்கு கொடுக்கப்பட்ட “நற்செய்தி” என்ன என்பதே இப்போதைய கேள்வி.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலிகளிலும், ஜனாதிபதி தேர்தலிலும், பொது தேர்தலிலும் தமிழர்களின் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு பெற்றுத்தருவது சம்பந்தரின் பொறுப்பு. அதற்காக அவர் என்னென்ன யுக்திகளை பாவிக்கப்போகிறார் என்பது ஐ.தே.க யை பொறுத்தவரை கவலைப்பட தேவையில்லாத விடயம். அதற்கு ஈடாக அவருக்கு வழங்கப்படவுள்ளது பிரதமர் பதவி. அப்படியானால் வடக்கு-கிழக்கு இணைவின் விதி? அந்த விடயத்துக்கு வருமுன், ஐக்கிய தேசிய கட்சியிடம் அடுத்தத் திட்டம் ஒன்றும் உண்டாம். அதாவது தமிழருக்கு பிரதமர் பதவி போல் முஸ்லிம்களுக்கு ஒரு முதலமைச்சர் பதவியாம். அதுவும் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் கிழக்கிலாம். அது எப்படி சாத்தியமாகும், இரண்டு முக்கிய முஸ்லீம் அமைச்சர்கள் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து நானா நீயா போட்டியில் இறங்கும் போதும், வடக்கு-கிழக்கு இணைவை அழுத்தமாக எடுத்துரைக்க த.தே.கூ க்கு கிழக்கின் முதலமைச்சர் பதவியும் தேவைபடும் போதும்?

இதோ அதற்கான பரிகாரமாக ஐக்கிய தேசிய கட்சி- முஸ்லீம் காங்கிரஸ் கூட்டு என்ற திட்டத்தை முன்வைக்கின்றார் ரணில் விக்கிரமசிங்க. இதற்கு சம்பந்தரின் ஆசிர்வாதமும் உண்டாம். அதாவது நீண்டகால தமிழ்-முஸ்லீம் உறவை கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் அனுசரணையில் போட்டியிடும் தமிழர்களை நிராகரித்து ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழர்களின் வாக்குகளை திருப்புவதாம். முஸ்லீம் ஒருவர் கிழக்கின் முதலமைச்சராக வர வேண்டுமாயின், அப்படி வரயிருப்பவர் தொடர்ந்தும் அப்படியே இருக்க வேண்டுமாயின் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் மாத்திரமல்ல ஜனாதிபதி தேர்தலிலும், பொது தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சிக்கே முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக் கொடுப்பது அந்த முஸ்லீம் முதலமைச்சரின் முதற் கடமையாம்.

இதற்கிடையில் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் என்ற விடயமும் வருகின்றது. ஆனால் அரசியலில் பிரவேசிக்க சரத்பொன்சேகா ஆயத்தம் செய்தாலும் அவர் நேரடியாக தேர்தலில் போட்டியிட சட்டம் பல தடைகளை போட்டுள்ளது. ஆகவே மிக அண்மைய எதிர்காலத்தில் சரத்பொன்சேகா சற்று ஒதுங்கியே இருப்பாராம். ஆக சரத் பொன்சேகாவின் பிரவேசமில்லா தேர்தல் மூலம் இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றத்தை அதுவும் அமெரிக்க சார்பு ஆட்சியாளர்களை அமர்த்துவது இப்போதைய ஐ.தே.கட்சியின் (டெல்லி,வொசிங்டன்) திட்டம்.

இலங்கையில் அமெரிக்க சார்பு அரசாங்கம் ஒன்றுக்கு இந்தியாவின் ஆதரவு எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு, அது ஒரு நிபந்தனையின் அடிப்படையிலும், தன்னை சுற்றி நிலை கொள்ளும் சீனாவின் பிரதேச ஊடுறுவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அமெரிக்காவின் வலிந்த முயற்சிக்கு நிபந்தனையில்லா ஆதரவு என்ற அடிப்படையிலுமாகும். இதில் நிபந்தனையின் அடிப்படையிலான ஆதரவென்பது எந்த சந்தர்பத்திலும் இலங்கையின் வடக்கும்-கிழக்கும் இணையாமல் பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் பொறுப்பு என்ற நிலை. இது இலங்கையில் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கும் போது அதை செய்ய அமெரிக்கா ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. இது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு சார்ந்த விடயம். அதாவது சென்னையின் இலங்கை தமிழர் தொடர்பான ஆதரவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை, இன்னும் தெளிவாக சொல்வதானால் இந்தியாவின் ஐக்கியத்துக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய அகண்ட தமிழ்(Pan Tamil) பிரதேசம் என்று முளைவிடும் கனவை முளையிலேயே கிள்ளிவிடும் தேவை, டெல்லிக்கு உள்ளதால் அமெரிக்கா மூலம் அதை செய்விப்பதென்பது டெல்லியின் ராஜதந்திர நகர்வுக்கு முக்கியமானது, மூச்சுவிட கிடைக்கும் ஒரு சந்தர்ப்பமும் கூட. இலங்கை தமிழர் தொடர்பான சென்னையின் ஆவேச பேச்சுக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சென்னை தலைவிக்கு சொல்லப்பட்ட செய்தி அவர் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு தயாராகும் போது அமெரிக்காவின் நிபந்தையற்ற ஆதரவு என்ற ஆசைவார்த்தை. குஜராத்தின் நரேந்திர மோடிக்கு மட்டுமா பிரதமர் கனவுகாண முடியும்? எனக்கு என்ன குறை என்பது தலைவியின் (தன்னை தானே கேட்கும்) கேள்வி.

ஆக சீனாவைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க முயற்சிக்கு ஜெனிவாவில் இலங்கை பாவிக்கப்பட்டதும் அது தொடர்ந்தும் பாவிக்கப்படும் என்பதும் தெளிவு. ஜெனிவா விடயத்தில் இந்தியாவின் திடீர் மனமாறம் போல் காட்டப்பட்ட ஆனால் நன்கு திட்டமிடப்பட்ட செயலானது சீனா விடயத்தில் அமெரிக்காவின் இந்தியாவுக்கான சார்பு நடவடிக்கையும், மீண்டும் இலங்கைத் தமிழரை (மறைமுகமாக)தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலைபாடு தொடர்பாக அமெரிக்கா மூலம், அதாவது ஹிலரி கிலிங்டன்- ஜெயலலிதா ஜெயராம் சந்திப்பு மூலம், தமிழ் நாட்டை (சொல்வி ஜெயராமை) அடக்கி வாசிக்க பண்ணியதும் இந்தியாவின் வெற்றியாகும்.

பிரதமர் பதவி கொடுத்தும், முதலமைச்சர் பதவி கொடுத்தும் சிறுபான்மையராக தங்களை தாழ்தி உரிமையிழந்தவர்களாக நிற்போருக்கு ஒரு சிறிய நம்பிக்கையை கொடுக்க அதுவும் அமெரிக்க, இந்திய கண்காணிப்பில், முற்பட்டுள்ளது இலங்கையில் மீண்டும் இனங்களுக்கிடையே ஒரு மீளிணைவை ஏற்படுத்த எடுக்கும் காத்திரமான நடவடிக்கையாகும். இது திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்துச் செல்லப்படுமானால் அது ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றியாகும்.

வடக்கின் மாகாணசபை முற்றும் முழுதான தமிழர் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, கிழக்கு முஸ்லீம்களின் கையில் அல்லது அச்சபையில் முஸ்லீம்களின் செல்வாக்கு செலுத்தும் சக்தி அதிகமாக இருப்பதே வடக்கு-கிழக்கு இணைவு என்ற விடயத்தை கொள்கை அளவில் மட்டும் வைத்திருக்க வழி சமைக்கும். வடக்கும், கிழக்கும் தனித்தனி மாகாணங்களக இருப்பதே தமிழருக்கும், சோனவருக்கும் நமையாக அமையும். கிழக்கிலும் தமிழ் முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும் கூட இரண்டு மாகாணங்களுக்கான முதலமைச்சர்கள் என்பது இணைக்கப்பட்ட மாகாணங்களின் ஒரு முதலமைசர் என்ற நிலையைவிட அனுகூலம் கூடியதே. ஆக கிழக்கை தேவைப்படும் போதாகிலும் முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுப்பதே தமிழருக்கு நீண்ட காலத்தில் நன்மை அளிக்கும் விடயமாகும். ஆனாலும் கிழக்கின் முதமைச்சர் பதவி என்பதற்காக தங்களின் மத உரிமையை சமரசம் செய்ய(compromise) எந்த முஸ்லீம் அரசியல்வாதியாவது முயற்சிப்பாரானால் அவர் இலங்கையின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வருங்கால உரிமையுடன் கூடிய வாழ்வை அடகுவைக்கின்றார் என்றே கொள்வேண்டியுள்ளது. அது முஸ்லீம்களின் தோல்வியே.

இங்கு குறிப்பிட்டப்படி சம்பந்தருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டால் த.தே.கூ யின் சேனாதிராஜா, அடைக்கல நாதன், அரியேந்திரன் போன்றோர் மற்றும் தேசிய அரசியலில் இருந்து அனேகமாக ஓரங்கட்டப்பட்டுள்ள சிவாஜிலிங்கம் போன்றோரும் அவர்களால் உருவேற்றப்பட எப்போதுமே தயார் நிலையில் உள்ள புலம்பெயர் தமிழரும், ஏன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், உலகத் தமிழர் பேரவையும் சும்மா இருந்துவிடுவார்களா? அவர்களின் தமிழீழ கனவு அல்லது ஆகக்குறைந்தது வடக்கு-கிழக்கும் இணைந்த தமிழர் தாயக பிரதேசம்(?) தொடர்பான நிலைப்பாட்டை எப்படி வெற்றி கொள்வது என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதுள்ளது.

தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற வரையறைக்குள் இருக்கும் மேல் சொன்னவர்கள் மீது அழுத்தம் கொடுப்பதும், அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும் அமெரிக்க வழிகாட்டலில், ஐரோப்பிய முன்னெடுப்பில் சர்வதேச சமூகத்துக்கு பெரியவிடயமே அல்ல. ஆயுதத்தை தேவைக்கு அதிகமாக நம்பிகெட்ட தமிழர், இனி ஆயுதவழிக்கு செல்லமாட்டார் என்பது முடிந்த முடிவு. ஆயுதம்தான் ஒரே வழி என்று சளைக்காமல் கூச்சல் போடுவோர் தமிழ் நாட்டின் சீமான், வைகோ போன்றோரும், அலைவு சமூகத்தின்(diaspora) கைக்கு அடக்கமான ஒரு பகுதியுமே. குறிப்பாக ஐரோப்பிய, ஸ்கெண்டிநேவிய, அவுஸ்திரேலிய பொதுவான அரசியல் சூழல் இந்த தமிழர்களை ஒரு எல்லைக்கு அப்பால் செல்லவிடாது என்பது வெளிப்படையான இரகசியம். இது நாட்டின் அமைதியை விரும்பும் அனைவருக்குமான வெற்றி.

ஆனால் இதையே கொழும்பு தவறாக அர்தப்படுத்தி தன் நாட்டில் காட்டுதர்பார் நடத்தலாம் என்றோ அல்லது பொரும்பான்மை இனத்துக்கு எதிராக எதுவுமே செய்யமுடியாது, பௌத்த பிக்குகளை பகைக்கமுடியாது என்ற சாக்குப் போக்குகள், அல்லது இலங்கையில் மீண்டும் புலிகள் அல்லது இன்னும் ஒரு படி மேலே சென்று முஸ்லீம் பயங்கரவாதம் என்ற புதிய கண்டுபிடிப்புக்கள் ஒரு எல்லைக்கு மேல் இனி வேலை செய்யாது என்பதும் உறுதி. ஆக இனமேலாணமைவாதம் மூலம் சகபிரஜைகளை அடக்கி ஆளலாம் என்ற கனவு கலையும் நேரம் நெருங்கிவிட்டதை அரசாங்கம் உணரத்தவறுமானால் அது அவர்களுக்கான நிரந்தர தோல்வியாகவே அமையும். ஆகவே சந்தர்ப்பம் பார்த்திருந்தவர்கள் தம் நலனுக்கு செய்யும் காரியங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நம் நலனையும் உள்வாங்குமாக இருந்தால் நாம் அது பற்றி மிகவும் கவனமாக காரியமாற்றுவது காலத்தின் தேவை.

“இலங்கை நிலத்தில் இஸ்லாமிய அரசியல் ” என்ற புத்தக வெளியீடு எதிர் வரும் 2012-06-02 அன்று சனிக்கிழமை கெகுனுகொள்ள அல் இர்பானிய்யா அரபுக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது . அல் இர்பானிய்யா அரபுக் கல்லூரியில் இறுதியாண்டில் கல்வி கற்கும் அல் ஹாபிழ் தாரிக் சம்ஊன் என்ற மானவறினால் “இலங்கை நிலத்தில் இஸ்லாமிய அரசியல” என்ற நூல் எழுதப்பட்டுள்ளது .

இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக அல் இர்பானிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஐ.எம். இஹ்ஸான் கலந்துகொள்வதுடன் , “இலங்கை நிலத்தில் இஸ்லாமிய அரசியல்’ நூல் பற்றிய விமர்சன உரையை சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் மன்சூர் நளீமி நிகழ்த்தவுள்ளார்.

நூல்களை வாங்கி இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்போம்.

  – ஆங்கில மூலம்: லதீப் பாறூக் / தமிழாக்கம்: அபூ அம்றி –
அமெரிக்காவின் இவ்வணுகுமுறை பின்வரும் உதாரணம் மூலமாக தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.
1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஷிமொன் பெரஸ் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலிய விமானங்கள் லெபனானுக்கான ஐக்கிய நாடுகள் சபை படைப்பிரிவின் தலைமையகத்தின் மீது வான்வழி குண்டுத்தாக்குதலை மேற்கொண்டன.

லெபனானின் கனா என்ற கிராமத்தில் அமைந்திருந்த இத்தலமையகத்தில் சுமார் 800 க்கு மேற்பட்ட லெபனான் அகதிகளும் தஞ்சமடைந்திருந்தனர். இத்தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் உற்பட 100 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு ஏராளமானோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். மேலும் நான்கு ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வீரர்களும் இதன்போது கொல்லப்பட்டனர்.
1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி கனா படுகொலைகளை நேரில் கண்ட இங்கிலாந்தின் தி இண்டேபெண்டன்ட் பத்திரிகையின் ஊடகவியலாளர் ராபர்ட் பிஸ்க் இப்படுகொலைகளை தனது பத்திரிகையில் பின்வருமாறு விபரித்திருந்தார்.

இப்படுகொலைகள் மிகவும் கொடுமையானவை. அப்பாவி பொது மக்கள் இவ்வாறு கொடூரமாக கொல்லப்பட்டதை நான் கண்டதில்லை. லெபனானிய அகதி பெண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டு குவியல்களாக கிடந்தனர். அநேகமமான உடல்கள் உறுப்புகள் துண்டாடப்பட்ட நிலையில் காணப்பட்டன. சில உடலங்களில் தலை துண்டிக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கு மேற்பட்ட சடலங்கள் குவிந்து கிடந்தன. ஒரு குழந்தையின் உடல் தலை இன்றி கிடந்தது. லெபனானிய முஸ்லிம் அகதிகள் ஐக்கிய நாடுகள் சபை கட்டடத்தில் இஸ்ரேலிய வெறியாட்டத்திலிருந்து தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். எனினும் செர்பெநிக்கா வாசிகளை போல அவர்களுக்கும் எந்த விதமான பாதுகாப்பும் கிட்டவில்லை.

வழமை போன்று இஸ்ரேல் இது ஒரு விபத்து என்றும் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றும் கூறியது. அச்சமயம் ஐக்கிய நாடுகள் சபை செயலராக பணியாற்றிய பூத்ரஸ் பூத்ரஸ் காலி இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக ஒரு குழுவை நியமித்தார். இக்குழுவுக்கு நெதர்லாந்து நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிராங்க்ளின் வான் கப்பன் தலைமை தாங்கினார்.
இரண்டு வாரங்கள் விசாரணைகள் நடாத்தப்பட்டு உருவாக்கப்பட்ட பிரான்க்ளினின் அறிக்கையில் இஸ்ரேல வேண்டுமென்றே இத்தாக்குதலை மேற்கொண்டது என்று நிரூபித்ததோடு ஐக்கியநாடுகள் படைப்பிரிவின் தலைமையகத்தில் அகதிகள் தங்கியிருந்ததை இஸ்ரேல அறிந்திருக்கவில்லை என்ற நிலைப்பாட்டை ஆதாரங்களுடன் மறுத்திருந்தார். அத்துடன் எவ்வாறான சூழ்நிலையிலும் ஐக்கிய நாடுகள் படைப்பிரிவின் தளமைகத்தின் மீது யாரும் தாக்குதல் நடாத்துவது அனுமதிக்கப்பட முடியாதது என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.
 
இஸ்ரேலின் இந்த குற்றத்தை மறைப்பதற்காக அமெரிக்கா கடுமையாக முயற்சித்தது. நம்பகமான தகவல்களின் படி குறித்த அறிக்கையை வெளியிடாதிருக்க அல்லது அதன் வார்த்தை பிரயோகங்களை இஸ்ரேலுக்கு பாதமில்லாத வகையில் மாற்றுமாறு பூத்ரஸ் காலிக்கு அமெரிக்க அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. எனினும் இந்த அழுத்தங்களை கவனத்தில் கொள்ளாது பூத்ரஸ் காலி துணிவுடன் இந்த அறிக்கையை 1996 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி வெளியிட்டார். பூத்ரஸ் காலியின் இச்செயல் உண்மையை உலகுக்கு உணர்த்தியதோடு அமெர்க்கா மற்றும் இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. எனினும் இத்துணிகர, நியாயமான செயலுக்கான விலையை கொடுக்கவேண்டிய நிலை பூத்ரஸ் காலிக்கு பின்னர் அமெரிக்காவினால் ஏற்படுத்தப்பட்டது.
இச்சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற பூத்ரஸ் காலியின் இரண்டாவது பதவிக்கால நீடிப்பு பிரேரணை அமெரிக்க வீட்டோ அதிகாரத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் போது ஆபிரிக்க நாடுகள், சீனா, ரஷ்யா, ஜப்பான், ஜேர்மன், பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளுடன் பெரும்பாலான உலக நாடுகள் இவரின் மீள் நியமனத்துக்கு ஆதரவளித்திருந்தன.
ஆபிரிக்க நாடுகளை மிரட்டி அவற்றின் ஆதரவுடன் கோபி அனானை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக ஆக்குவதில் அமெரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது நோக்கங்களை எய்துவதற்கு தடையாக இருந்த பூத்ரஸ் காலியினை பதவியில் இருந்து அகற்றியது. கோபி அனான் இதற்கு பிரதியுபகாரமாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களை பேணுவதில் கண்ணும் கருத்துமாக தனது பணிகளை மேற்கொண்டார்.
1930 ஆம் ஆண்டு முதல் தனது மனிதப்படுகொலைகளை தொடர்ச்சியாக செய்து வரும் இஸ்ரேல் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெனின் என்ற இடத்தில் அமைந்துள்ள பாலஸ்தீனிய பொது மக்கள் குடியிருப்பு ஒன்றில் தொடச்சியாக இரண்டு வாரங்கள் தனது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டது. மிகவும் நவீன ஆயுதங்களை கொண்டு நிராயுத பாணிகளான பொது மக்களை கொண்று குவித்தது. சரியான மரண எண்ணிக்கை விபரங்கள் அறியப்படாத போதும் சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு போன்ற சர்வதேச நிறுவணங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இஸ்ரேலின் இப்படுகொலைக்கான ஆதாரங்களை சேகரித்திருந்தனர்.
இத்தாக்குதல்களின் போது இஸ்ரேல் பாலஸ்தீன அகதிகளை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியது. இஸ்ரேலிய யுத்த தாங்கிகள் சுமார் 150 வீடுகளை தரைமட்டமாக்கின. இதன் போது சில வீடுகளில் தங்கி இருந்தோருக்கு அவற்றில் இருந்து வெளியேறுவதற்கு அவகாசம் வழங்கப்படவில்லை.
இப்படுகொலைகள் தொடர்பாக 2002 ஏப்ரல் 19 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை ஒரு பிரேரணையை நிறைவேற்றியது. இப்பிரேரணையில் இஸ்ரேலை கண்டித்து எந்த விதமான வார்த்தை பிரயோகங்களும் இருக்கவில்லை மாறாக ஒரு தகவல் திரட்டும் குழு ஒன்றே இதன் மூலம் உருவாக்கப்பட்டது. இக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்த இஸ்ரேல் பின்னர் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.
அமெரிக்க அழுத்தங்களுக்கு அடிபணிந்த கோபி அனான் இஸ்ரேலின் அசமந்த போக்கை காரணம் காட்டி சிறிது காலத்தின் பின்னர் இக்குழுவை கலைத்தார். குழு சம்பவ இடத்தை பார்வையிடாமல் அறிக்கை தர பணிக்கப்பட்டது. இது சம்பந்தமாக தகவல் வேண்டி அனான் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு அனான் கடிதங்கள் அனுப்பினார் எனினும் வழமை போல் இஸ்ரேல் இதற்கு எந்த வித பதிலும் அனுப்பவில்லை. பின்னர் இஸ்ரேலிய நலன்களை பேணும் வகையில் ஒரு கண்துடைப்பு அறிக்கை அனானினால் வெளியிடப்பட்டது.
அனான் இறுதியாக ஜெனீவாவில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை சமர்பித்தார். இதற்கான தகவல்கள் இரண்டாம்தர மூலங்களில் இருந்தே பெறப்பட்டது. மிகவும் பக்க சார்பானதாகவும் அறிக்கை மூலம் எந்த விதமான முடிவுகளை மேற்கொள்ள முடியாத வகையிலும் இவ்வறிக்கை அமைந்திருந்தது.
மிகவும் தெள்ளத்தெளிவான சான்றுகள் இருந்தும் எதற்காக அனான் இவ்வாறு யதார்த்தத்துக்கு புறம்பாக நடந்து கொண்டார்? அவரின் பதவித்தேர்வு பின்புலங்களை நோக்கும் போது அவரிடம் இருந் வேறு எவ்வகையான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியும். இவ்வாறு தான் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை மூலம் உலகை ஆள்கின்றது.
2008 டிசம்பர் 27 முதல் 2009 ஜனவரி 18 வரை காசா பள்ளத்தாக்கை ஆக்கிரமித்த போது இஸ்ரேல் புரிந்த மனித உரிமை மீறல் சம்பந்தமாக இரண்டு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையால் தயாரிக்கப்பட்டன. 34 பக்கங்களை கொண்ட முதலாவது அறிக்கை நவீ பிள்ளையினாலும் இரண்டாவது அறிக்கை தென் ஆபிரிக்காவை சேர்ந்த யூதரான ரிசார்ட் கோல்ட் ஸ்டோன் என்பவராலும் தயாரிக்கப்பட்டன. இரண்டாவது அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் 2009 செப்டம்பர் மாத நடுப்பகுதியில் சமர்பிக்கப்பட்டது.
நவீ பிள்ளை தனது அறிக்கையில் காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேலிய படைகள் சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருந்தார்.
பின்னர் ரிசார்டினால் மேற்கொள்ளப்பட்ட தகவல் சேகரிப்பின் முடிவில் இஸ்ரேல் காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் மனித உரிமை மீறல், போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தெள்ளத்தெளிவான ஆதாரங்கள் இருந்த நிலையிலும் ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை தண்டிக்க எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த அறிக்கைகளை கிடப்பில் போடும்படி பான் கீ மூனை கேட்டுக்கொள்ள அவரும் அடிபணிந்தார். அறிக்கை ஐக்கிய நாடுகள் சபை ஆவன காப்பகத்தில் தூசி படிந்து கொண்டிருக்கின்றது. இதன் மூலம் பான் கீ மூன் தனது இரண்டாவது பதவிக்காலத்தை உறுதி செய்து கொண்டுள்ளார்.

இன்றைய நிலையில் பாலஸ்தீனியர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு ஒரு சட்டம், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு சட்டம் யூத சியோனிஸ்டுகளுக்கு எந்த விதமான சட்டங்களும் அற்ற நிலையே ஐக்கிய நாடுகள் சபையில் காணப்படுகின்றது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை சிரிய விவகாரங்களில் தலையிடல் வேண்டுமென்ற பான் கீ மூனின் கோரிக்கை சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேற்குலகு லிபியாவை அழித்தது போல் சிரியாவையும் அழிக்க தேவையான அத்திவாரத்தை பான் கீ மூன் இடுகின்றாரா என்ற ஐயம் எழுந்துள்ளது.
அமெரிக்க அரசுகளை தீர்மானிப்பதில் யூதர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அமெரிக்க அதிபர்கள் யூத நலன் பேணும் அமைப்புகளின் கடுத்த பரிசீலனைகளின் பின்னரே தீர்மானிக்கப்படுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அதிபர்கள் யூத நலன் பேணும் விடயத்தில் கண்ணும் கருத்துமாக செயற்படவேண்டும் இல்லையேல் அதற்கான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். உதாரணமாக தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தேர்தலில் வெற்றிபெற முன்னர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்து அவர்களின் கலாசார தொப்பியணிந்த வண்ணம் ஜெருசலம் இஸ்ரேலின் பிரதேசம் என்பதில் எந்த கருத்து முரண்பாடும் இல்லை என்று அறிவித்தார்.

ஜெருசலம் 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்து கைப்பற்றிய பகுதி என்பது உலகறிந்த உண்மையாகும். அவரின் இந்த கருத்தே சியோனிஸ்டுகளின் அங்கீகாரத்தை அவருக்கு பெற்று கொடுத்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற ஏதுவாக அமைந்தது.

இதற்கு பிரதியுபகாரமாக ஒபாமா இஸ்ரேல் நலன் பேணுவதில் அதீத அக்கறை கொண்டவராக விளங்குகிறார். ஒபாமா ஜனாதிபதியானத்தின் பின்னர் அவர் மேற்கொண்ட முதல் நியமனம் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியான அமெரிக்க சியோனிஸ்ட் ரஹேம் இஸ்ரேல் இமானுவேல் என்வருடையதாகும். இமானுவேல் இன் தந்தை இர்குன் என்ற யூத தீவிரவாத அமைப்பின் உறுப்பினராவார். இத்தீவிரவாத அமைப்பு பாலஸ்தீன் பிரதேசத்தில் யூத குடியேற்றங்களை உருவாக்கும் நோக்கில் பாலஸ்தீன போது மக்களை கொண்று குவித்த ஒரு அமைப்பாகும்.
இவ்வாறான ஒரு பொறிமுறை மூலம் ஐக்கிய நாடுகள் சபையை பயன்படுத்தி உலகை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில் பாலஸ்தீனிய பிரச்சினைகளில் ஐக்கிய நாடுகள் சபை நடுநிலையாக செயற்படும் என எதிர்பார்க்க முடியாது.
– ஆங்கில மூலம்: லதீப் பாறூக் / தமிழாக்கம்: அபூ அம்றி –
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமைதொயான முறையில் தமது எதிர்ப்புகளை வெளிக்கொணரும் சிறிய ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்து வரும் சர்வாதிகாரி பஷர் அல் அசாத்தின் நடவடிக்கைகள் மிக அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் கவனத்தை ஈர்த்துள்ளன.
 
தினந்தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் அசாத்தின் இரத்த வெறிக்கு பலியாகுவதை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொலைக்காட்சிகளின் ஊடாக உலகு அதிர்ச்சியுடன் அவதானிக்கும் அதேவேளை சிரிய மக்களின் துயரம் பான் கீ மூனின் கவன ஈர்ப்பைப் பெறுவதற்கு ஏறக்குறைய ஒரு ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. இவ்வோராண்டு காலப்பகுதியில் ஏறத்தாள 5000 அப்பாவி பொது மக்கள் ஒரு சர்வாதிகாரியின் இரத்த பசிக்கு இரையாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 31 ஆம் திகதி ஜோர்டானின் தலை நகர் அம்மானுக்கு விரைந்த பான் கீ மூன் ஆர்ப்பட்டக்காரர்களை படுகொலை செய்யும் அசாத்தின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மேலும் இது தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று அறிவித்தார். உலக நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அசாத்தை பதவி விலக்கக்கோரும் ஒரு பிரேரணை நிறைவேற்றப்படும் என கருதுவதாகவும் தெரிவித்திருந்தார். அண்மையில் குறித்த பிரேரணை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு சமர்பிக்கப்பட்டது.
குறித்த பிரேரணை எவ்விதமான தடைகளையோ அசாத்தின் நடவடிக்கைகள் மீது கடுமையான கண்டனங்களை தெரிவிப்பிதாகவோ அமைந்த்திருக்கவில்லை. மாறாக உறுப்பு நாடுகள் சிரிய அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதை தடுத்தல், உடனடியாக வன்முறைகளை நிறுத்தல் மற்றும் தேர்தல்களை நடாத்துவதற்காக அசாத் தனது அதிகாரத்தை உதவி அதிபருக்கு வழங்குதல் போன்ற விடயங்களை கொண்டிருந்தது.
கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட வேளை ரஷ்யா மற்றும் சீனா தமது வீட்டோ சிறப்புரிமையை பயன்படுத்தி குறித்த பிரேரணையை நிராகரித்தன. இதன் மூலம் ஒரு குறுகிய காலத்துக்கு தப்பித்துள்ள அசாத் தனது படுகொலைகளை தொடர்ந்து வருகிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவுக்கான தூதுவர் சூசன் ரைஸ் ரஷ்யா மற்றும் சீனாவின் நடவடிக்கை அமெரிக்காவை ஏமாற்றமடைய வைத்துள்ளதாக தெரிவித்தார். இவ்வீட்டோ நடவடிக்கை பிரேரணையை ஆதரித்த ஏனைய நாடுகளின் கண்டனங்களுக்கும் உள்ளானது. சீன மற்றும் ரஷ்ய ஆதரவுக்காக பிரேரணையின் எழுத்து வடிவ மாற்றம் மற்றும் தடைகள் சம்பந்தமான விடயங்களில் நெகிழ்வுத்தன்மை காண்பிக்கப்பட்ட போதும் இப்பிரேரணை தோல்வியடைந்தது.
பான் கீ மூனின் இப்பிரேரணை இராணுவ நடவடிக்கைகள் மூலம் லிபியாவை நிர்மூலமாக்கியது போல் சிரியாவையும் சுடுகாடாக்குவதற்கு தேவையான ஆரம்பக் கட்ட நடவடிக்கையா ? என்பதே இங்குள்ள பிரதான கேள்வியாகும்.
நவீன கால போர் வெறியர்களான அமெரிக்க மற்றும் நேடோவின் நிகழ்ச்சி நிரலில் பாரசீக வளைகுடாவில் இஸ்ரேலின் மேலாதிக்கத்துக்கு தடையாகவுள்ள ஈராக், லிபியா, சிரியா மற்றும் ஈரான் நாடுகளை துவம்சம் செய்வதும் பிராந்திய என்னை வளங்களை கொள்ளையிடுவதும் முக்கியமான குறிக்கோள்கள் என்பது ஒரு வெளிப்படை உண்மையாகும்.
இந்த நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பிராந்தியத்தில் ஏறக்குறைய அபிவிருத்தி அடைந்த நிலையில் செல்வந்த நாடுகளாக இருந்த ஈராக் மற்றும் லிபியா என்பன நிர்மூலமாக்கப்பட்டு விட்டன. அடுத்த இலக்கு சிரியாவாகும். முஅம்மர் கடாபி, மற்றும் சதாம் ஹுசைன் போன்றவர்களின் சர்வாதிகார ஆட்சி முறை போர் வெறியர்களின் நோக்காங்களை அடைவதற்கு அனுகூலமான சூழ்நிலையை ஏற்படுத்தியது போன்று அசாதும் சிரியாவின் மீதான தாக்குதல்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலையை தனது அடக்குமுறை ஆட்சியின் மூலம் ஏற்படுத்தியுள்ளார்.
பொது மக்களின் நியாயமான சுதந்திர எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடுள்ள அசாத் அவற்றை நிறைவேற்றுவதற்கு பதிலாக மக்களின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயற்சிக்கின்றார். படுகொலைகள், கைதுகள், சித்திரவதைகள் மற்றும் அடிப்படை வசதிகளை முடக்குதல் மூலம் சுதந்திர வேட்கையுள்ள மக்களின் முன்னால் அசாத் நீண்ட காலம் தாக்கு பிடிக்க முடியாது.
சிரியா மீதான தாக்குதல் நியாயங்களை தேடும் அமெரிக்க நேடோ போர் வெறியர்களுக்கு அசாத்தின் கொடுங்கோல் ஆட்சி நீடிப்பு மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.
ஐக்கிய நாடுகள் சபை இரண்டாம் உலகப்போரின் பின்னர் உலக நாடுகளில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட் ஒரு அமைப்பாகும்.
எனினும் தனது இலக்கில் இருந்து விலகியுள்ள இவ்வமைப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் தாக்குதல்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் ஒரு நிறுவனமாகவே செயற்படுகின்றது.
1989 ஆம் ஆண்டு பனிப்போர் நிறைவுற்று சோவியத் யூனியன் துண்டு துண்டாக்கப்பட்ட பின்னர் சட்டவிரோத போர்களை அங்கீகரிக்கும் செயற்பாடு வெளிப்படையாக நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான்,ஈராக் மற்றும் லிபியா என்பன ஐக்கிய நாடுகள் சபையின் இந்த கபட தனத்தை நமக்கு கோடிட்டு காட்டுகின்றன.
(தொடரும்…)