Archive for the ‘விளையாட்டுச் செய்திகள்’ Category

சென்னை::சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. போட்டியை நேரில் பார்ப்பதற்காக இன்று காலை டிக்கெட் எடுக்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் இடையே நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணியும், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோத உள்ளது. இது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் நேற்று காலை 8 மணி முதல் விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை தொடர்ந்து டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தகவல் பரவியது. இதனால் இன்று காலை 8 மணிக்கு நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் எந்த கவுன்டரிலும் டிக்கெட் விற்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி கேள்விப்பட்ட சேப்பாக்கம் மைதான ஊழியர்கள் விரைந்து வந்து, இறுதி போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் நேற்று மாலையுடன் விற்பனையாகி விட்டது. இன்று டிக்கெட் விற்பனை செய்யப்படவில்லை என்று கூறினர். ஆனாலும் ரசிகர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்றனர். இதையடுத்து போலீசார் அங்கு வந்து, ரசிகர்களிடம் பேசி திருப்பி அனுப்பினர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Advertisements

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை அடுத்துத் தான் பதவியிலிருந்து விலகியபோது இலங்கை அணியின் தலைவராக அஞ்ஜலோ மத்தியூஸ் இலங்கை அணித் தலைவராகப் பதவியேற்றிருக்க வேண்டும் எனக் கருதுவதாக இலங்கை அணியின் மூத்த வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். அதற்கான தகுதிகள் அவரிடம் காணப்படுவதாகத் தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை அடுத்து அப்போது அணித் தலைவராகப் பதவி வகித்த குமார் சங்கக்கார அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

குமார் சங்கக்காரவோடு அப்போது பிரதம தேர்வாளராகப் பதவி வகித்த அரவிந்த டி சில்வாவும் அப்பதவியிலிருந்து விலகியிருந்தார். அதைத் தவிர, குமார் சங்கக்காரவிற்கு உப அணித்தலைவராக இருந்த மஹேல ஜெயவர்தனவும் அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

குமார் சங்கக்காரவின் பதவி விலகலை அடுத்து இலங்கை அணியின் தலைவராக திலகரட்ண டில்ஷான் நியமிக்கப்பட்டி ருந்தார்.

அன்ஜலோ மத்தியூஸிற்கு தலைமைத் துவப் பண்புகள் காணப்படுவதாகத் தெரிவித்த குமார் சங்கக்கார, நீண்டகாலத்திற்கு இலங்கை அணியை வழிநடத்துவதற்கான திறமை அவரிடம் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

தான் அணித்தலைமையிலிருந்து விலகியபோது அன்ஜலோ மத்தியூஸிற்கு அணித் தலைமையை வழங்குவதற்கான சிறந்த தருணம் எனக் கருதியதாகவும், அதற்கான சிறந்த தருணமாக தனது பதவி விலகல் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அன்ஜலோ மத்தியூஸிற்கு கிரிக்கெட் பற்றிய சிறந்த அறிவு காணப்படுவதாகத் தெரிவித்த சங்கக்கார சிந்திக்கும் திறனுடைய வீரராக அவர் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது மஹேல ஜெயவர்தனவின் கீழ் உப அணித் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிறந்த பாதையில் செல்வதாகக் கருதுவதாகவும் சங்கக்கார தெரிவித்தார்.

இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் இறைச்சிக் கடைக்காரர்களையே உருவாக்கும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை மீது மாத்திரமன்றி, இந்திய கிரிக்கெட் சபை மீதும் விமர்சனங்களை முன்வைத்த அர்ஜுன ரணதுங்க, இந்திய கிரிக்கெட் சபை ஐ.பி.எல் போட்டிகள் மூலம் கிரிக்கெட்டைச் சிதைப்பதாக குற்றஞ்சாட்டினார்.

இலங்கை கிரிக்கெட் அணி முக்கியமான தொடர்களிலெல்லாம் தோல்விகளைச் சந்தித்து வருவதற்கு இலங்கையில் கிரிக்கெட்டிற்குள் அரசியல் புகுந்தமையே காரணம் எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதியிலிருந்து அனைவரும் கிரிக்கெட்டிற்குள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தவது வெளிப்படையானது எனத் தெரிவித்தார்.

தான் விளையாடிய காலத்தில் அரசியல்வாதிகளால் விளையாட்டு வீரர்கள் தங்களது முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படுவதில்லை எனத் தெரிவித்த ரணதுங்க, ஜனாதிபதி உட்பட அனைவரும் இப்போது அதைச் செய்து வருவதாகத் தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் தனது விரலை அனைத்திலும் தற்போது புகுத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இலங்கை கிரிக்கெட் சபை திறனற்றவர்களால் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், தற்போதைய கிரிக்கெட் சபையைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் தலையை அசைப்பவர்களாகவே உள்ளனர் எனத் தெரிவித்தார்.

தான் கிரிக்கெட் சபைத்தலைவராக இருந்த காலத்தில் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தனது தேர்தல் செலவுகளுக்காக இலங்கைக் கிரிக்கெட் சபையின் நிதியைப் பயன்படுத்த முனைந்தார் எனவும், அதைத் தான் எதிர்த்து நின்றதாகவும் ரணதுங்க தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் பணத்தை எவ்வாறு ஈட்டுவது என்பது குறித்தே அனைவரது கவனமும் காணப்படுவதாகத் தெரிவித்த ரணதுங்க, அப்பணத்தை தேவையற்ற ரீதியில் செலவழிப்பது குறித்தே கவனம் செலுத்தவதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையின் பாடசாலைக் கிரிக்கெட் மிகவும் செழிப்பானதாகக் காணப்படுகின்ற போதிலும், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை அணியின் வளர்ச்சி குறைவாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

இலங்கைக் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் அணியிடம் தோல்வியுறும் என ஒரு வருடத்திற்கு முன்னர் தான் குறிப்பிட்டதாகவும், அண்மையில் அதுவும் நடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தியக் கிரிக்கெட் அணி சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கவில்லை எனக்குறிப்பிட்ட ரணதுங்க, தற்போது அவர்களால் கவாஸ்கர், வெங்சாக்கர், விஸ்வானத், டெண்டுல்கர், ட்ராவிட், லக்ஸ்மன் போன்ற வீரர்களை உருவாக்க முடியவில்லை எனவும், ஐ.பி.எல் போட்டிகள் மூலம் இறைச்சிக் கடைக்காரர்களையே அவர்களால் உருவாக்க முடிகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

முத்தையா முரளிதரன் பந்தை எறிகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டபோது அவர் பந்தை எறியவில்லை என்பது தனக்குத் தெரிந்ததன் காரணமாக நடுவர்களுடன் மோதியதாகவும், அப்போதே கிரிக்கெட்டின் விதிகள், நடைமுறைகளை வாசித்து அறிந்துகொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் காரணமாக முரளிதரனின் கிரிக்கெட் வாழ்வைக் காப்பாற்ற முடிந்ததாகத் தெரிவித்த அவர், எனினும் தற்போது பந்துவீசும் சில பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறையைப் பார்க்கும் போது தான் செய்தது தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது எனவும் தெரிவித்தார்.

அத்தோடு தற்போதைய அணித்தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கிரிக்கெட் விதிகளைப் பற்றிய அறிவு கிடையாது எனவும், அவர்கள் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் முகவர்களிடம் அதற்காகத் தங்கியிருப்பதாகவும் ரணதுங்க தெரிவித்தார்

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துஅணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

பி.சாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 5 ஆவது நாளான இன்று இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 278 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டன.

இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 275 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி 460 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் மஹேல ஜயவர்தன 67 ஓட்டங்களையும் திலான் சமரவீர 47 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்திவ்ஸ் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் கிறேம் ஸ்வான் 106 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தனார்.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஓர் ஓட்டத்தையும் பெறுவதற்கு முன்னர் டில்ஷானின் பந்துவீச்சில் அணித்தலைவர் அன்ட்ரூ ஸ்ரௌஸ் ஆட்டமிழந்தார். ஜொனதன் ட்ரொன் 5 ஓட்டங்களுடன் ரங்கன ஹேரத் ஆட்டமிழந்தார்.

எனினும் அலிஸ்டயர் குக் 49 ஓட்டங்களையும் கெவின் பீட்டர்சன் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.  முதல் இன்னிங்ஸில் 151 ஓட்டங்களைப் பெற்ற பீட்டர்சன் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார். தொடரின் சிறப்பாட்டக்காரராக மஹேல ஜயவர்தன தெரிவானார்.

இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கைக்கெதிராக நாளைய தினம் இடம்பெறவுள்ள தீர்மானம் மிக்க மூன்றாவது இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலிய அணி சார்பாக அணித்தலைவர் மைக்கல் கிளார்க், வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பற்றின்சன் இருவரும் பங்குபெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்தொடைத் தசைநாரில் ஏற்பட்ட உபாதை காரணமாக மைக்கல் கிளார்க்கும், பின்பகுதியில் ஏற்பட்ட உபாதை ஜேம்ஸ் பற்றின்சனும் நாளைய போட்டியில் பங்குபெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் மைக்கல் கிளார்க், அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்ரேலிய அணி சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபெற மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய அணி சார்பாக நாளைய தினம் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் மைக்கல் கிளார்க் இற்குப் பதிலாக பீற்றர் பொறஸ்ற் உம், ஜேம்ஸ் பற்றின்சனுக்குப் பதிலாக அணிக்குள் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள நேதன் லையனும் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் நேதன் லையன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெற்றிருக்காத நிலையிலும், ஜேம்ஸ் பற்றின்சனின் காயம் மற்றும் நேதன் லையனின் உள்ளூர் போட்டிகளில் காட்டிய திறமை வெளிப்பாடுகள் ஆகியன காரணமாக இறுதிநேரத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி சார்பாக முழுமையான உடற்தகுதியடையாத காரணத்தால் அணியில் இடம்பெற்றிராத அன்ஜலோ மத்தியூஸ் முழுமையாகக் குணமடையும் பட்சத்தில் சாமர கப்புகதரவிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்படுவார். அதைத் தவிர வேறெந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்பட வாய்ப்புக்களில்லை.

நாளைய மூன்றாவது இறுதிப்போட்டியும், நேற்றைய போட்டி இடம்பெற்ற அடிலெய்ட் ஓவல் மைதானத்திலேயே இடம்பெறவுள்ள நிலையில், நேற்றைய போட்டியில் வெற்றிபெற்ற மனத்திடத்துடன் இலங்கை அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (க்ரிஷ்)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் நான்காவது 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இலங்கையில் நடைபெறவுள்ளன.

இலங்கையில் நடைபெறவுள்ள இவ்வுலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குரிய சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே அமைச்சரவைக்கு முன்வைத்திருந்த ஆலோசனைக்கமைய அமைச்சரவை இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

மகளிருக்கும் ஆண்களுக்குமான இக்கிரிக்கெட் போட்டிகளுக்கென 20 அணிகள் கலந்து கொள்கின்றன. 52 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கென சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 9.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு வழங்குகிறது.

மேலும் இக்கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கை செலவிட வேண்டிய தொகைக்காக மேலும் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்க முன்வரவுள்ளது.

பொருளாதார அபிவிருத்தியுடன் இலங்கை தொடர்பான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவும் இச்சந்தர்ப்பமாக பயன்படுத்த முடியும் என அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலா சபை, இலங்கை ஹோட்டல் நிறுவனம், முதலீட்டுச் சபை, தேசிய மரபுரிமை அமைச்சு, கலாசார அமைச்சு, என்பன இணைந்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கு செய்துள்ளன

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கரூரில் நடந்த ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை அணியில் 20 ஆண்டுகளாக நான் விளையாடி வருகிறேன். வளர்ந்து வரும் வீரர்களுக்கு 3 ஆண்டுகள் அவகாசம் தர வேண்டும். அப்போதுதான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உருவாக வாய்ப்பு கிடைக்கும். தற்போது உலகளவில் ஹர்பஜன்சிங், அஸ்வின், டேனியல் வெட்டோரி, அஜ்மல், சுவான் ஆகியோர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளனர்.
சச்சின் விரைவில் 100- வது சதம் அடிக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். அவரும் முயற்சி செய்கிறார். அவர் சிறந்த வீரர். விரைவில் 100-வது சதத்தை அடித்து ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவார்.
சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது இந்தியாவின் முடிவு. எனது சொந்த கருத்துப்படி சச்சின் அந்த விருதுக்கு தகுதியானவர். இந்திய அணி நாடு திரும்பியதும் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து நன்றாக விளையாடுவார்கள். வரும் ஐ.பி.எல். சீசன் கிரிக்கெட்டில் விளையாட மூன்று ஆப்சன்கள் கொடுத்துள்ளேன். அதில் ஏதாவது ஒரு அளவில் இடம் பிடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

தெற்காசிய உதைப்பந்தாட்ட சம்மேளன (சாவ்) சுற்றுப்போட்டியில் இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் இலங்கை அணி வீரர் மொஹமட் செய்ன் 17 ஆவது நிமிடத்தில் முதலாவது கோலை அடித்தார். இருந்தபோதும் அதன்பின்னர் திறமையாக ஆடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் 3 கோல்களi அடித்து போட்டியில் வெற்றியீட்டினர்.
நாளை இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையே மற்றுமொரு போட்டி நடைபெறவுள்ளது.

 

இலங்கையில் நடைபெறும் முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஒக். 08) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை பீச் பார்க்கில் நடைபெறவுள்ளது.

இதற்காக ஹம்பாந்தோட்டை நகரும், விளையாட்டு மைதானமும், தெற்காசிய நாடுகளின் தேசியக் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய எட்டு நாடுகளில் இருந்தும் 400 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகள் ஹம்பாந்தோட்டைக்கு வருகை தந்துள்ளனர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஹசிம் அம்லா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் “லீக்” போட்டியில் ஆடியதால் டிவில்லியர்ஸ் காயம் அடைந்தார். இதனால் அவருக்கு பதிலாக அம்லாவுக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது.

மார்க் பவுச்சர், டேவிட் மில்லர் ஆகியோர் ஒருநாள் போட்டிக்கான அணியிலும், 20 ஓவர் போட்டியிலும் இடம் பெற்றுள்ளனர். காலிஸ், ஸ்டெய்னுக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக தேசிய அணிக்கு கெப்டனாக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதன்முறையாகுமென தெரிவிக்கப்படுகிறது.